பொங்கல் திருநாள் கட்டூரை - Pongal Thirunal Katturai in Tamil

Vizhimaa
0

Pongal Thirunal Katturai in Tamil

முன்னுரை;

வணக்கம் விழிமா வாசகர்களே....!

பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் எழுதிய ஒரு சிறப்பான கருத்துகள் பொதிந்துள்ள "பொங்கல் திருநாள் பற்றிய கட்டூரை"

இந்த கட்டூரைக்கு அந்த சிறுவன் வைத்த தலைப்பு "எங்கள் ஊரும் பொங்கல் பண்டிகையும்" உண்மையில் அந்த சிறுவனின் விவரிக்கும் திறமை கண்டு விழிமா வலைத்தளம் வாயடைத்து போனது...

Pongal Thirunal Katturai in Tamil

ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவன் தன்னுடைய பொங்கல் பண்டிகையை எவ்வளவு அழகாக கொண்டாடுகிறான் என்பதை மிகவும் வண்ணமயமாக கூறியிருந்தான்...

மேலும் வழவழ என்று இழுக்காமல் "எங்கள் ஊரும் பொங்கல் பண்டிகையும்" என்ற இந்த பொங்கல் திருநாள் கட்டூரையை படித்து மகிழ்வோம்...

பொங்கல் திருநாள் சிறப்பு கட்டூரை

வணக்கம்...என் பெயர் விழிமா, பொங்கல் நெருங்கி விட்டது என்றால் எங்கள் ஊரில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.சாயங்கால நேரத்தில் ஒவ்வொருவர் வீட்டு திண்ணையிலும் கூட்டம் கூடும்,பொங்கலை புதுத்துணியுடன் கொண்டாட எல்லோரும் புத்தாடைகளை முன்னரே எடுத்து மகிழ்வார்கள்.புத்தாடை எடுப்பது ஒரு மகிழ்ச்சி என்றால்... எடுத்த புத்தாடைகளை சுற்றி இருக்கும் உறவுக்காரர்களிடம் காட்டி மகிழ்வது இன்னொரு ஆனந்தம்...அவர்கள் நீ எந்த கடையில் வாங்கினாய்..சொல்லு!

இந்த புடவை சூப்பரா இருக்கே! எவ்வளவு விலை இது? என்று அவர்கள் ஆச்சர்யத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மேலும் மகிழ்ச்சியை தரும்...

பொங்கலுக்கு முன்னாடி நாட்களெல்லாம் இப்படி கழிய...எல்லோர் கண்களிலும் ஒர் எதிர்பார்ப்பு நிறைந்திருக்கும்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற இந்த பழமொழியை சொல்லாத விவசாயிகளே எங்கள் ஊரில் இருக்கமாட்டார்கள்...எந்த ஒரு நல்ல நிகழ்வையும் தை மாதம் வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பார்கள்.

எந்த ஒரு கஷ்ட காலத்திற்கும் தை வந்தால் வழியும் விடுதலையும் கிடைக்கும் என்று நம்புவார்கள்.

அப்படி என்ன இந்த தை மாதத்தில் இருக்கிறது என்றால்...தை மாதம் என்பது அறுவடை காலம்.

நட்டு வைத்து, பிள்ளைபோல வளர்த்துவிட்ட பயிர்களை எல்லாம் அறுவடை செய்து அதில் இருந்து கிடைக்கும் அந்த பணத்தை வைத்து அந்த வருடத்தின் செலவுகளையும் வரவுகளையும் கணக்கு செய்வார்கள்.

வரவால் குடும்பம் வளரும் அதான்,தை வந்தால் குடும்பம் வளரும் என்பது நம்பிக்கை.

முதலில் எல்லாம் அறுவடை செய்யும் நாளில் பொங்கல் கொண்டாடினார்கள்...இப்பொழுது நிரந்தரமாக தை 1 பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கலும் எங்கள் ஊரில் திருவிழா போல் தான் இருக்கும்.எல்லோர் வீட்டிற்கும் விருந்தினர்கள் வருவார்கள்.
எங்களை போன்ற சின்ன பிள்ளைகள் யார் யார் எல்லாம் நம் சொந்தக்காரர்கள் என்று அப்பப்போ தெரிந்தும் கொள்வோம்...

ஊரை விட்டு பிழைப்புக்காக வெளியே சென்ற சித்தப்பா...சித்தி,அத்தை மாமா என்ற கூட்டமும் தங்கள் வருகையை பதிவு செய்யும்...

ஜேஜே என்ற ஜனங்களின் சத்தத்தில் மனதில் எங்கோ ஓடிக்கொண்டிருந்த பள்ளிக்கூட வீட்டுப்பாட நினைவுகள் எல்லாம் காணாமல் போகும். பொங்கல் முடிந்து பள்ளிக்கு செல்லும் காலையில் தான் தெரியும் வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டோம் என்று...

வாருங்கள் பொங்கல் பண்டிகைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்...

தை 1 க்கு முதல் நாள் போகிப் பண்டிகை,

பொங்கல் வந்திடுச்சு என்பதை நினைவுப்படுத்தும் பண்டிகை தான் போகி..."பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் போகி" என்பதை பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன்.ஆனால் எங்கள் ஊரில் போகி என்றால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அம்மாக்கள் எழுந்து எங்களை வீட்டிற்கு வெளியே அனுப்பி விட்டு வீட்டை சுத்தம் செய்து கழுவி வாசலில் சாணி தெளித்து பூக்கோலம் போட்டு ...அதற்கு அந்த வீட்டு இளம்பெண்கள் அடிக்கு கலர் பொடிகளை பாக்க நாங்கள் வீடு வீடாக செல்வோம்...

பொங்கல் பண்டிகையில் காலையில் அம்மாக்கள் வெகு சீக்கிரம் எழுந்து விடுவார்கள்... எங்களை போன்ற சிறுபிள்ளைகளுக்கு அதிகாலை வேடிக்கை என்பது சாணி தெளித்து வாசல் நிறைந்து வழியும் அளவிற்கு போடும் வண்ண வண்ண கோலங்களும் காலேஜ் படித்த அக்காக்கள் வாசலில் வண்ணபொடியால் எழுதும் HAPPY PONGAL என்ற வாசகமும் தான்..இதற்கே மணி எட்டாகி விடும்.

அதற்கு மேல் போகி அன்று அம்மனுக்கு விரதம் இருப்பார்கள்.சாப்பாடு,சாம்பார்,வடை,
அப்பளம்,எனக்கு பிடித்த உருளைக்கிழங்கு  பொறியல் மற்றும் ஏதபோகமாக அசத்தலாக சமைத்து அம்மனுக்கு விரதம் வைப்பார்கள்.அன்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, நூல் கண்டு எடுத்து அதை கையில் கட்டும் அளவிற்கு இரண்டாக மூன்றாக வெட்டி மஞ்சள் பூசி வேப்பங்கொத்தில் வைத்து அம்மனுக்கு படைத்து கையில் கட்டி விடுவார்கள்.

வாசலில் அறுகம்புல், வில்வம்,வேப்பிலை மற்றும்
இன்னும் பேர் தெரியாத சில சாமிக்கு உகந்த இலைகளால் மாலை கட்டி வீட்டு வாசலில் தோரணமாய் தொங்க விடுவார்கள்.

அம்மா என்னை அழைத்து வெளியூரில் இருந்து வந்த உறவுக்காரர்களை எல்லாம் உணவு அருந்த என்னை அழைத்து வரச் சொல்வார்.
எனக்கு விருந்தோம்பல் என்ற பழக்கம் வரவேண்டும் என்று அப்படி செய்வார்.என் அம்மாவும் சென்று எல்லோரையும் அழைத்து வந்து உணவு பரிமாறுவாள்.

போகிப் பண்டிகை எங்கள் ஊரில் இப்படித்தான் கழியும்...

தை முதல் நாள்;

தை முதல் நாள், எங்கள் ஊரில் வாசலில் சாணி தெளித்து எங்கள் வீட்டு குமரிப் பெண்கள் தங்கள் கைகளால் சூரியனின் முன் பொங்கல் பானை கோலமிட்டு வாசல் நிறைய வண்ண கோலமிட்டு...அழகு பார்க்கும் அழகான காலைப்பொழுதாக...விடியும்.

வீட்டில் அம்மா,பாட்டியை தவிர எல்லோரும் அடுப்பில் வெந்நீர் வைத்து காலையிலேயே குளித்துவிட்டு பொங்கலுக்காக வாங்கி வைத்திருந்த புத்தாடைகளை அணிந்து கொள்வோம்...
அம்மாவும் பாட்டியும் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு குளித்துவிட்டு வருவார்கள்.அதற்குள் சிறு பிள்ளைகள் எல்லோரும் தங்களுடைய புத்தாடைகளை காட்டுவதற்காக அத்தை வீட்டிற்கும் சித்தி வீட்டிற்கும் சென்று வருவோம்.பின்பு அம்மா...அடுப்பில் சூரியனுக்கு பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்துவிட்டு எங்களுக்கு கொஞ்சம் கொடுப்பார்கள்.நாங்கள் எல்லோரும் விளையாட சென்று விடுவோம்.

தை முதல் நாள் என்றால் எங்கள் ஊரில் இளந்தாரி அண்ணன்கள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளே வெகு பிரபலமாக இருக்கும்.நாங்கள் எல்லோரும் வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு
நேரே எங்கள் ஊரில் மந்தைவெளிக்கு சென்று விடுவோம்.

அங்கு சைக்கிள் போட்டி முதல் கோகோ வரை அனைத்து போட்டிகளும் வைப்பார்கள்.5 வயது குழந்தை முதல் ஐம்பது வயது பாட்டிகள் வரைக்கும் விளையாட்டு போட்டியில் பங்கு பெறலாம்.வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் கட்டாயம் உண்டு.

இதில் எனக்கு பிடித்த விளையாட்டு கயிறு இழுத்தல்.ஆமாம் ஊரே திரண்டு வரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.ஒரு அணியில் தலா 25 பேர் இருப்பார்கள்.கயிறு பதிலாக இரும்பி கம்பிகளை கூட வைத்து விளையாடுவார்கள்.ஏனென்றால் இரண்டு முறை நல்ல மொத்தமான கயிறுகளே அறுந்து போய் விழுந்திருக்கின்றன....மாமன் மச்சான் என்று இரு பட்டாளங்கள்...ஒற்றுமையாக அந்த கயிறை இருப்பதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.யார் தோத்தாலும் ஜெயிச்சாலும் மகிழ்ச்சி அளவில்லாமல் தாண்டவமாடும்.ஏனென்றால் எப்படியும் ஜெயிப்பது நம்ம பங்காலி தானே என்ற எண்ணம் தான்.

தை முதல் நாள் இப்படிதான் எங்களுக்கு கழியும்...

மாட்டுப்பொங்கல்;

எங்கள் ஊரில் விவசாயம் தான் பிரதான தொழில் அதனால் மாடு இல்லாத வீடே கிடையாது என்று கூட சொல்லலாம்.மாட்டுப்பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்து அப்பாவும் தாத்தாவும் என்னையும் அண்ணனையும் அழைத்துக்கொண்டு ஆத்துக்கு செல்வார்.கூடவே வண்ணப்பொடிகளையும் வாங்கிக்கொண்டு போவோம்.மாடுகளை ஆற்றில் இறக்கி அதனை குளிப்பாட்டி விட்டு அதன் மீது முதலில் மஞ்சள் குங்குமம் வைத்து பின்பு அதன் உடம்பு முழுவதும் வாங்கி வந்த கலர் பொடிகளையும் பொட்டு போல் உடம்பெல்லாம் வைத்து விட்டு,மாடுகளை மிகவும் அழகாக பூஜைக்கு தயார் படுத்துவோம்.மாட்டின் கொம்புகளில் பலூன், கழுத்தில் சலங்கைகள் போன்றவற்றை கட்டி தயார் படுத்துவோம்.

பின்பு வீட்டிற்கு மாட்டை அழைத்து வந்து தொழுவத்தில் கட்டுவோம்...ஊர் பொதுவில் உள்ள மந்தை வெளியில் ஊரில் உள்ள அனைத்து மாடுகளையும் ஒன்று சேர்த்து அவற்றிற்கு மாரியம்மன் கோயில் முன்னிலையில் பூஜை செய்து அலங்கரித்த மாடுகளை ஊர்வலமாக 
அழைத்து வந்து வீட்டின் தொழுவத்தில் கட்டுவோம்.

இரவில் தான் இன்னும் விஷேசமாக இருக்கும்.மாலை நேரத்தில் நல்ல நேரம் பார்த்து மாடுகளுக்கு அவரவர் வீடுகளில் பூஜை செய்வார்கள்.சாணிப் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் மாலை கட்டி மூன்று வகை பழங்களுடன்,தேன் கரும்புகளும் மஞ்சளும் ,ஒரு படி நெல்லும் வைத்து பூஜை செய்து பொங்கல் வைப்பாரகள்.

பூஜை முடிந்ததும்.கட்டி வைத்த அறுகம்புல் மாலையையும் ஆக்கி வைத்து பொங்கலை  மாட்டிற்கு கொடுப்பார்கள்.மாலையை கழுத்தில் போட்டு பொங்கலை வாயில் ஊட்டும் பொழுது நாங்கள் எல்லோரும் கையில் ஒரு பித்தளை தட்டை எடுத்துக்கொண்டு பொங்கலோ பொங்கல் என்று ஆராவாரம் செய்வோம்.இந்த நிகழ்வு முடிந்தவுடன்,அத்தை வீடுகளுக்கு சென்று பால் பொங்கிடுச்சா? அத்தை மாமா?
உறவுக்காரர்களை வம்பிழுப்போம்.

அப்பொழுது எல்லோரும் எல்லோரையும் அவரவர் வீடுகளுக்கு சாப்பிட அழைப்பார்கள்.அது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் வழக்கம் இல்லாததால் மாட்டுப்பொங்கல் அன்று வெறும் பூஜைகளோடு முடிந்துவிடுகின்றன.

காணும் பொங்கலும் கலகலப்பும்


அடுத்த நாள் காலையில், காணும் பொங்கல், நகர்புறங்களில் காணும் பொங்கலை கடற்கரை , விலங்குகள் பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று பொழுதை கழிக்கின்றனர்.ஆனால் எங்கள் கிராமத்தில் காணும் பொங்கல் அன்று தான் உண்மையான பொங்கல் திருநாள் வேடிக்கையே இருக்கும்.ஆம் அன்று தான் பெரிய மாரியம்மன் (பெரியாயி) கோவில் திருவிழா.வருடாவருடம் காணும் பொங்கல் அன்று திருவிழா தான்.

காலையில் எல்லோர் வீட்டிலும் அசைவ சாப்பாடாகத்தான் இருக்கும்.10 மணிக்கு மேல் திருவிழா கலைக்கட்டும்.குளித்து விட்டு புத்தாடை அணிந்து, ஊர் பெரியவர்கள் அனைவரும் மாரியம்மன் கோவிலுக்கு வந்து விடுவார்கள்.

பலூன் விற்கும் சைக்கிள் கடைகள் தெருக்கு தெரு நிற்கும்.குச்சி ஐஸ் கோன் ஐஸ் எல்லோருக்கும் பிடித்த வெண்ணிலா ஐஸ்கிரீம் என வண்டி வண்டியாய் நிற்கும்.எங்களைப் போன்ற பசங்க எல்லோரும் பொங்கல் காசை இப்படித்தான் செலவழிப்போம்.

சற்று நேரத்திற்கெல்லாம்,ஒரு அமைதி ஊரில் தென்படும் அப்பொழுது தான் தூரத்தில் தாரை தப்பட்டை அந்த அமைதியை கிழித்து கொண்டு வெளியே கேட்கும்.காத்தவராயன் சுவாமி மயானத்தில் பூஜை முடித்து விட்டு ஊருக்குள் காளியின் கோட்டை இடிக்க வரும்.அப்பொழுது எங்களைப்போல் விடலை பசங்க ஆளுக்கொரு வேஷம் போட்டுக்கொண்டு கையில் ஒரு கட்டையோடு தாயாராக இருப்போம் காளியின் கோட்டையை இடிக்க....

இப்படி ,காத்தவராயன் கோட்டையை இடித்தும்,ஊரை சுற்றி ஊர்வலம் வரும் உடனே முறத்து காளி என்ற சாமியும் ஊர்வலம் வரும்.

இவர்கள் இருவரும் ஊரை சுற்றி முடித்ததும் நெருப்புக்காளியும் வரும்.இப்படி ஒவ்வொரு சாமியாக அடுத்தடுத்து வர மந்தைவெளி ஜனங்களின் கூட்டம் அலைமோதும்...

ஊரில் அடிக்கடி பார்க்க முடியாத ஆட்களை எல்லாம் அப்பொழுது பார்த்து பேச முடியும்.

முடிவுரை:

எல்லா ஊர்வலமும் முடிந்த பின்பு,மாலை நான்கு மணி போல் பெரியாயி கோவிலுக்கு வீட்டில் செய்த மாவுத்தட்டை சாமிக்கு படைக்க எடுத்து செல்வார்கள்.

அம்மாக்கள், பாட்டிகள் என் எல்லோரும் கும்மி அடித்து, குலவி பாடி,பாட்டு பாடி மகிழ்வார்கள்.

அதே சமயத்தில் மந்தைவெளியில் கபடி போட்டி கலைகட்டும்.
இரவு 12 மணி வரை விளையாட்டும் கும்மியடிப்பதும் நீண்டு கொண்டே இருக்கும்.

விடிந்தால் பள்ளி செல்ல வேண்டும் என்ற நியாபகம் இல்லாமல் இரவு இரண்டு மணி வரை ஆட்டம் போடுவோம்.

காலையில் 7:30 மணிக்கு அம்மா எழுப்பி விடும்போது தான் பள்ளிக்கு செல்ல வேண்டும்,வீட்டு பாடங்கள் செய்ய மறந்து விட்டேன் என்ற எண்ணமே வரும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top