பசி வந்தால் பத்தும் பறந்து போகும் - பத்து என்ன?

Vizhimaa
0

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் - பத்து என்ன?

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற வார்த்தையை நாம் சிறுவயது முதலே கேள்விப்பட்டிருப்போம். அது என்ன பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து என்பது எதைக் குறிக்கிறது என்பதை தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருக்கிறோம் முதலில் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற இந்த வார்த்தை எங்கிருந்து பெறப்பட்டது எங்கிருந்து இந்த சொல்லாடல் நம் தமிழ் சமூகத்தில் உள்ள வந்தது என்பதை பார்ப்போம்! 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற இந்த சொல்லாடல் அவ்வையார் எனும் தமிழ் பெரும் மூதாட்டி அவர்களால் எழுதப்பட்ட "நல்வழி நாற்பது"எனும் பாடலில் 26 ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது மிகவும் தெளிவாக பசி வந்தால் என்னவெல்லாம் மனிதர் இடத்தில் இருந்து பிரிந்து போகும் எதையெல்லாம் மனமானது மறந்து போகும் என்பதை அவ்வை பாட்டி அவ்வளவு அழகாக கூறியுள்ளார் அந்த பாடலை தற்பொழுது இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறது வலைத்தளம். 
Pasi vanthal pathum paranthu pogum
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் -அந்த பத்தும் என்ன?


பாடல்:

மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.


பொருள் - விளக்கம்:

பசி வந்திட - பசிநோய் வந்தால்,

மானம் - மானமும், குலம் - குடிப்பிறப்பும்,

கல்வி - கல்வியும்,

வண்மை - ஈகையும்,

அறிவுடைமை - அறிவுடைமையும்,

தானம் - தானமும்,

தவம் - தவமும்,

உயர்ச்சி - உயர்வும்,

தாளாண்மை - தொழின் முயற்சியும்,

தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய,
பத்தும் பறந்துபோம் - இப் பத்தும் விட்டோடிப்போம்.

விளக்கம்:

பசி என்னும் உணர்வானது ஒரு மனிதனுக்கு தோன்றியது என்றால் அந்த மனிதனானவன் 
  1. மானம் எனப்படும் தன்மானம் மற்றும் சுயமரியாதையையும் இழப்பான். 
  2. குலம் என்று கருதப்படும் அவனுடைய பிறப்பால் கிடைத்த குடியின் மரியாதையையும் மறப்பான். 
  3. தான் கற்ற கல்வியையும் மறப்பான். 
  4. தன்னுள்ளே இருக்கும் ஈகை எனும் பண்பினையும் இழந்து போவான் 
  5. அறிவு எனப்படும் செல்வத்தையும் இழந்து வாடுவான். 
  6. தானம் செய்யும் மனப்பான்மையும் இழந்து போவான். 
  7. தவத்தால் கிடைத்த பலன்களையும் தவறவிடுவான். 
  8. தன் உயர் நிலையை மறந்து போவான். 
  9. தொழில் செய்து முயற்சியால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் இழப்பான் .
  10. தேனின் சுவையோடு பேசும் மாபெரும் மேல் காமமுறும் எண்ணத்தையும் இழப்பான்.
மேற்குறிப்பிட்டுள்ள 10 அம்சங்களையும் பசி வந்த ஒரு மனிதனானவன் இழப்பான்! என்பதையே பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று அவ்வையார் அவருடைய பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top