தன்னம்பிக்கை கதைகள்-தற்கொலை முடிவும் தேவதை கனவு

Vizhimaa
0

தன்னம்பிக்கை கதைகள்

ஏனோ பிறந்தோம் எதற்காகவோ வாழ்கிறோம் என்று உள்ளம் புழுங்குவோரின் மனதில் ஏதோ ஒரு சின்ன நம்பிக்கையை விதைப்பதே இந்த தன்னம்பிக்கை கதைகளின் முக்கிய நோக்கம்.கதைகள் என்றாலே சிலருக்கு தூக்கம் வரும் சிலருக்கு தூண்டுதல் வரும்.தூக்கமோ தூண்டுதலே கதையை பொறுத்தது அல்ல.கதை கேட்பவரை பொறுத்தது மற்றும் கதை சொல்பவரை பொறுத்தது.ஓடிக்கொண்டே இருக்கும் உங்கள் வாழ்க்கையில் இளைப்பாற இதுபோன்ற சில கதைகளும் உதவலாம்.

கதையின் தலைப்பு

தற்கொலை முடிவும் தேவதை கனவு

கதை-தன்னம்பிக்கை கதைகள்

வாழ்க்கையே வெறுத்துப் போய், ஏன்? தான் வாழ்கிறோம் என்ற எண்ணத்தோடு மிகவும் மனமுடைந்து வாழ்வில் இனி வாழ்வதற்கு எந்த காரணமும் தனக்கு இல்லை என்ற அளவுக்கு நொந்து போன ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்காக ஒரு பெரிய மலை உச்சியில் ஏறி நின்றான். 

Motivational stories in Tamil

அந்த மலையோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது அதன் உச்சியில் இருந்து கீழே பார்த்தால் ஒரு பெரிய பள்ளத்தாக்கு தென்பட்டது. அந்த பள்ளத்தாக்கில் சூரியனின் நிழல் கூட பட்டதில்லை போல, ஏனென்றால் அவ்வளவு இருட்டாக இருந்தது.இந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த மலை உச்சியை அடைந்து, குதிப்பதற்கு கூட தைரியம் இன்றி மனதுக்குளாகவே ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்களை எண்ணிக் கொண்டிருந்தான். மூன்று என்று கூறியவுடன் குதிக்க வேண்டும். இதுதான் அவனுடைய மனக்கணக்கு. 


ஆனால் விதி அவனுக்கு ஒரு கணக்கு வைத்திருந்தது. அவன் குதிக்க தாயாராக நின்ற பொழுது ஏதோ அசரீரி போன்று ஒரு குரல் கேட்டது. இளைஞனே நீ எப்படி இந்த மலை உச்சியை அடைந்தாய்? இது என்னுடைய மலை என்னுடைய அனுமதி இன்றி யாரும் இந்த மலைக்கு வரக்கூடாது. அப்படி இந்த மலைக்கு வர வேண்டும் என்றால் என்னுடைய அனுமதியை கட்டாயம் பெற்றாக வேண்டும். 


நீ என்னுடைய அனுமதியை பெறாமல் இந்த மலையை ஏறி விட்டாய் அதனால் உனக்கு நான் தண்டனை தரப் போகிறேன் என்று கூறியது. சாவதற்கு கூட என்னை நிம்மதியாக சாக விடமாட்டார்கள் போல் இருக்கிறதே! ஏன் இப்படி செய்கிறீர்கள்? நான் இங்கே தற்கொலை செய்துகொள்வதற்கு தான் வந்தேன்.


என்னை நிம்மதியாக சாக விடுங்கள் என்று கூறினான் அந்த இளைஞன். அதற்கு அந்தக் குரல் நான் இந்த மலையின் தேவதை. இது என்னுடைய மலை. அதனால் நீ என் தண்டனையை அனுபவித்து தான் ஆகவேண்டும் என்று கூறியது. இளைஞனும் சரி என்று ஒப்புக் கொண்டான். ஏனென்றால் சாகத்தான் வந்திருக்கிறோம் அதற்கு முன் இந்த தண்டனையையும் அனுபவித்து விடுவோம் எவ்வளவு அனுபவித்து விட்டோம். இது என்ன? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். 


தேவதை இந்த இளைஞனை அழைத்துக்கொண்டு மலை உச்சியிலிருந்து கீழே இறங்கியது சற்று கீழே ஒரு பக்கமாக இறங்கிய பொழுது அங்கு ஒரு குகை இருந்ததை இளைஞன் பார்த்தான். அந்த குகை இருக்கும் இடத்திற்கு இளைஞனை அழைத்து சென்றாள் தேவதை. இளைஞனே இன்றிலிருந்து இன்னும் ஐம்பது நாட்களுக்கு, நீ இந்த குகைக்குள் தான் இருக்க வேண்டும். இந்த குகையில் உனக்குத் தேவையான அனைத்தும் உள்ளது. இன்னும் ஐம்பது நாட்களுக்கு இந்த குகையில் தான் நீ வாழ்ந்தாக வேண்டும். நீ உள்ளே சென்றவுடன் இந்த குகையை நான் மூடி விடுவேன் என்று கூறியது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஐம்பது நாட்களுக்கு உள்ளே தங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதானே என்று கூறிக்கொண்டே அந்த இளைஞனும் குகைக்குள் சென்றான்.


இளைஞன் சென்றவுடன் அந்த தேவதை சொன்னது போலவே குகையை மூடியது. அதேசமயம் உள்ளே சென்ற இளைஞனுக்கு பலத்த ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால் அந்த குகைக்குள் அவனுக்குத் தேவையான உணவு, நீர் ,உறைவிடம் மற்றும் ஆடைகள் என அனைத்தும் இருந்தது. கூடவே இன்னும் சில பொருட்களும் இருந்தன. இதையெல்லாம் பார்த்த இளைஞன் 50 நாட்களை சுலபமாக கடந்து விடலாம் என்று எண்ணினான். தேவதை விட்டுச்சென்ற 50 நாட்களும் சாப்பிட்டு தூங்கி சாப்பிட்டு தூங்கி என்று உண்டுகளித் தான் உறங்கியும் களித்தான். 50வது நாள் முடிவடைந்ததும் தேவதை வந்தாள். குகையின் கதவை திறந்தாள் அப்போது அந்த இளைஞன் உடல் பெருத்து போய் அந்த குகையின் முன் இருந்தான்.


இதை பார்த்த தேவதை இளைஞனே இந்த அனுபவம் உனக்கு எப்படி இருந்தது என்று கேட்டாள். அதற்கு இளைஞனும் நன்றாக இருந்தது. தினமும் நன்றாக சாப்பிட்டேன் நன்றாக உறங்கினேன். அவ்வளவுதான் என்றான். சரி இப்போது நீ எங்கே போகப் போகிறாய் என்று தேவதை கேட்டாள். அதற்கு இளைஞன் தயவு செய்து என்னை விட்டுவிடு நான் மலை உச்சிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றான். அதற்கு தேவதையோ இளைஞனே நீ என்ன செய்கிறாய், உன் வாழ்வை நீயே அழித்துக் கொள்ளப் போகிறாயா? என்று கேட்டாள். ஆமாம் எனக்கு அவ்வளவு கஷ்டங்கள் வாழ்க்கையில் இனிமேல் நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? அதனால் என்னை விட்டு விடு நான் மலை உச்சிக்கு சென்று கீழே குதிக்கப் போகிறேன் என்றான். 


அதற்கு அந்த தேவதை இளைஞனே 50 நாட்கள் நான் கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டாய். இப்பொழுது சில மணி நேரங்கள் என்னோடு வா உனக்கு சில காட்சிகளை நான் காட்ட வேண்டும். என்னனு தெரிந்து கொள்ளலாம் என்று சரி என்று ஒப்புக் கொண்டான். தேவதை அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு மலை உச்சிக்கு சென்றது. பின்பு மழையின் இன்னொரு பக்கத்தை அந்த இளைஞனுக்கு காட்டியது. அந்தப் பக்கத்தில மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டது. இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை இளைஞன் ஏறி வந்த மற்றொரு பக்கத்தில் யாரும் இல்லை அவன் ஆள் அரவமற்ற நிலையில் மலை ஏறினான். ஆனால் அதே மலையின் மற்றொரு புறத்தில் நிறைய மனிதர்கள் தென்படுகிறார்கள். இங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தேவதையை பார்த்து இளைஞன் கேட்டான். அதற்கு அந்த தேவதை வா என்னோடு நானே காண்பிக்கிறேன் என்றது.


அவள் அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு மலையின் மற்றொரு பக்கத்தில் உள்ள அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றாள்.அங்கு இளைஞனை அடைத்து வைத்த குகை போலவே இன்னும் மூன்று வகையான குகைகள் இருந்தன. அந்த குகைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மிக்கதாக இருந்தது முதல் குகை ஓவிய கூடமாக காட்சியளித்தது. இரண்டாவது குவை சிற்பக் கூடமாக காட்சி அளித்தது. மூன்றாவது வகை மூலிகைத் தோட்டமாக காட்சியளித்தது. இதனை பார்வையிட்டு செல்லவே இங்கு நிறைய மனிதர்கள் சுற்றுலாவிற்கு வந்து சென்றனர். இதையே தேவதை அவனுக்கு காண்பித்தது. 


தற்கொலை செய்து கொள்ள வந்த இளைஞனிடம் தேவதை சொல்ல ஆரம்பித்தது, இது என்னுடைய மலை. இங்கு என் அனுமதி இன்றி வருபவர்களுக்கு நிச்சயம் நான் தண்டனை தருவேன்.


முன்னொரு காலத்தில் இந்த மலை முழுவதும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது.அப்படி இந்த மலையில் இருக்கும் மூலிகைகளிலிருந்து சாறு எடுத்து ஓவியம் வரைய வந்தான் ஒருவன், அவனை உன்னை அடைத்து வைத்தது போல் ஒரு குகையில் தான் அடைத்து வைத்திருந்தேன்.அதேபோல இந்த மலையில் இருக்கிற பாறைகளை பயன்படுத்தி அழகான சிற்பங்கள் செய்வதற்காக ஒருவர் வந்திருந்தார். அவருக்கும் அதே போல் ஒரு குகையில் 50 நாட்கள் சிறை வைத்திருந்தேன். மீண்டும் ஒரு மனிதன் இந்த மலையில் இருக்கும் மூலிகைச் செடிகளின் விதைகளை எடுத்து ஒரு மூலிகைத் தோட்டம் அமைப்பதற்காக வந்திருந்தான். அவனையும் அதேபோல் ஒரு குகையில் 50 நாட்கள் அடைத்து வைத்திருந்தேன்.


இந்த மூவரையும் அடைத்து வைத்து 50 நாட்கள் கழித்து அவர்களை விடுதலை செய்தபோது அந்த மூன்று குகைகளும் வெறும் குகைகளாக மட்டும் இல்லை. அந்த ஓவியனை அடைத்து வைத்திருந்த குகை, ஒரு அழகான ஓவியக் கூடமாக காட்சியளித்தது. அந்த சிற்பக் கலைகள் செய்பவனை அடைத்து வைத்திருந்த குகை, ஒரு அழகான சிற்ப கூடமாக காட்சியளித்தது. அந்த மூலிகை தோட்டம் அமைக்க வந்திருந்த மனிதனை அடைத்து வைத்திருந்த குகை, ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் மூலிகை தோட்டமாக காட்சியளித்தது. இதுவே அந்த மூன்று குகைகளும் தோன்றியதன் வரலாறு. 


இப்பொழுது உன்னுடைய நிலையை யோசித்துப் பார் அவர்களை அடைத்து வைத்திருந்தது போலவே உன்னையும் அதே மாதிரி ஒரு குகையில் தான் ஐம்பது நாட்கள் அடைத்து வைத்திருந்தேன். ஆனால் நீயோ உண்டு உறங்கி சொகுசாய் உன் நாட்களை கழித்து இருக்கிறாய். 


நான் இந்த மலைக்கு தற்கொலை செய்துகொள்வதற்காக வரும் அனைத்து மனிதர்களையும் அதே குகையில் தான் அடைத்து வைத்திருப்பேன். அந்த குகையில் உணவு உடை இருப்பிடம் சேர்த்து இன்னும் சில பொருட்களையும் நான் வைத்திருப்பேன். அதாவது அவரவர் திறமைக்கு ஏற்ற பொருட்களையும் நான் வைத்திருப்பேன். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு வரும் பெருவாரியான மனிதர்கள் அந்த பொருட்களை பெரிதுபடுத்துவதில்லை. அவர்களின் எண்ணங்கள் வேறு எந்த பொருளின் மீதும் திரும்புவதே இல்லை. அவர்களின் எண்ணமெல்லாம் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதிலேயே இருக்கிறது. நான் கொடுத்த 50 நாட்களில் உன் திறமையை பயன்படுத்தி அந்த குகையில் ஒரு மாற்றத்தை உன்னால் கொண்டு வந்திருக்க முடியும்.ஆனால் நீ அதுபோல் செய்யவில்லை. இப்பொழுது உனக்கு ஒன்று புரிகிறதா? நீ உன் பிரச்சனைகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ள என் மலைக்கு வந்து இருக்கிறாய், நான் ஒன்று கூறுகிறேன் நன்றாக புரிந்து கொள்! நீ தற்கொலை செய்து கொள்வதற்கு வந்ததன் காரணம் உன்னுடைய பிரச்சனைகளால் அல்ல. உன்னுடைய பிரச்சனைகளை நீ பார்க்கும் விதம் தான் உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறது.

கதை சொல்லும் நீதி

வெறும் பிரட்சனைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் விரக்தி தான் மிஞ்சும். உன் வாழ்க்கையில் பிரட்சனைகளிடையே அதை தீர்க்க சின்ன சின்னதாய் கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் அதன் நடுவே சின்ன சின்னதாய் கிடைக்கும் மகிழ்சிகளையும் முழுவதுமாக அனுபவிக்க வேண்டும்.இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் சரிபாதி.அதை அனுபவித்து மகிழ்வதே மனிதனின் நீதி.தேவதையின் இந்த வார்த்தைகளை உணர்ந்த வாலிபன் தன் முடிவை மாற்றிக் கொண்டான்.

நல்ல முறையில் தன் வாழ்க்கையை வாழ தொடங்கினான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top