சிறுவர் கதைகள்-கொக்கை கொட்டிய நண்டு

Vizhimaa
0

சிறுவர் கதைகள்

குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது மிகவும் அழகான அனுபவம் குழந்தைகளுக்கும் சரி கதை சொல்பவர்களுக்கும் சரி.மாறிப்போன இந்த மாடர்ன் உலகில் கதை சொல்லும் வேலையை கூகுளும் யூடியூப் செயலியும் செய்து கொண்டிருக்கின்றனர்.இந்த சிறுவர் கதைகள் குழந்தைகளை மிகவும் உற்சாகத்தோடு வைத்திருக்கும் அதே சமயம் சில நீதிகளையும் சொல்லித் தர உதவும்.கதை என்பது சொல்வதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்க வேண்டும்.அதையே அனைவரும் விரும்புவர்.

கதையின் தலைப்பு

கொக்கை கொட்டிய நண்டு!

கதை;(சிறுவர் குட்டி கதைகள்)

நீரை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் புகலிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்த ஏராளமான உயிரினங்கள் ஒரு அழகான குளத்தில் வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தில் மீன்களும் நண்டுகளும் தவளைகளும் பிறர் நீர்வாழ் உயிரினங்களும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. 

Children short stories in Tamil

அதே குளத்தில் தான் ஒரு கொக்கும் நீண்ட வருடங்களாக வாழ்ந்து வந்தது. சில நாட்களாகவே அந்த கொக்கு மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டது. ஏனென்றால் அந்த கொக்குக்கு வயதாகிவிட்டது என்று மனதிற்குள் பயம் வந்துவிட்டது. அதனால் முன்பை போல் ஓடியாடி தன்னுடைய இறையை பிடித்து உண்ண முடியவில்லை. அதாவது முன்பை போல தன்னுடைய இளவயதில் மீன்களை பிடித்து உண்டு வந்ததை போல தற்போது இந்த வயதான காலத்தில் தன்னால் மீன்களை பிடித்து உண்ண முடியவில்லை என்ற வருத்தத்துடன் குளக்கரையின் ஓரத்தில் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தது, இந்த வயதான கொக்கு.

அந்தக் கொக்கின் மனதில் தற்பொழுது உள்ளதெல்லாம் ஒன்றுதான் தனக்கு தினமும் எப்படியாவது பசியாறி கொள்ள உணவு வேண்டும். ஆனால் தன்னால் எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ள முடியாது. நீண்ட நேரம் இப்படியே யோசித்துக் கொண்டிருந்தது அந்த கொக்கு. ஒரு கொக்கு அந்தக் கரையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதை குளத்தில் இருந்த ஒரு நண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சரி என்னதான் கதை என்று தெரிந்து கொள்வோம் என்று நண்டும் அந்தக் கொக்கு இருக்கும் இடத்திற்கு சென்றது. கொக்கு அண்ணே என்ன பண்றீங்க ரொம்ப நேரமா இங்கேயே இருக்க மாதிரி தெரியுது அப்படின்னு அந்த நண்டு கொக்கை பார்த்து கேட்டது

எங்கோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா? என்ற கதையா செவனேன்னு இருந்த கொக்கு இப்போ யோசிக்க ஆரம்பித்தது. நண்டு கிட்ட என்ன சொல்லலாம். கொக்கு பொறுமையா சொல்ல ஆரம்பித்தது. நண்டு தம்பி இந்த குளத்துல நான் ரொம்ப வருஷமா வாழ்ந்துகிட்டு இருக்கேன், இங்கே இருக்கிற ஒவ்வொரு நீர்வாழ் உயிரினங்கள் மேலயும் எனக்கு தனி பாசம் இருக்கு. அதனாலதான் இப்போ ரொம்ப சோகமா இருக்கேன், அப்படின்னு நண்டு கிட்ட சொல்லுச்சு. அதுக்கு நண்டு என்னாச்சி அண்ணே? என்ன சொல்றீங்க? அப்படி என்ன சொல்லுங்கண்ணே! என்று கேட்டது நண்டு.

நான் இப்போதான் இந்த குளத்துக்கு பக்கத்துல இருக்க கிராமத்தில் இருந்து பறந்து வரன். அங்க இருக்கிற சில மீனவர்கள் இந்த குளத்துல அதிகமா மீன்கள் இருக்கிறத கவனிச்சுட்டு போயிருக்காங்க. அவங்க எல்லாரும் கூட்டமா நின்னு பேசுனத நான் கேட்டுட்டு தான் வரன். இந்த குளத்துல இருக்கிற மீன்களை மொத்தமா பிடிச்சுட்டு போயிடலாம்னு பேசிட்டு இருக்காங்க. இன்னும் 3 ல இருந்து நான்கு நாட்களில் இந்த குளத்துக்கு வந்துருவாங்க. வந்து, எல்லா மீன்களையும் நண்டுகளையும் பிடிச்சிட்டு போயிடுவாங்க. அத கேட்டுட்டு வந்ததிலிருந்து எனக்கு மனசே சரி இல்லை.

இதையெல்லாம் உங்க கிட்ட சொல்லி உங்கள பத்திரமா இருக்க சொல்லலாம்னு தான் வந்தேன் என்று கேள்வி கேட்ட நண்டிடம் பதில் கூறியது கொக்கு. இதைக் கேட்ட நண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனது. என்ன செய்வது என்று புரியாமல் திணறி நின்றது. உடனடியாக நீருக்கடியில் சென்றது, நீருக்கடியில் சென்ற நண்டு அங்கு இருந்த எல்லா மீன்களையும் ஒன்றுதிரட்டி மீன்களிடம் கொக்கு சொன்னவற்றை அப்படியே ஒப்பித்தது. அங்கிருந்த அனைத்து மீன்களுக்கும் உயிர் பயம் ஒட்டிக் கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றன. உடனே நண்டு மற்றும் மீன்கள் அனைத்தும் அந்த வயதான கொக்கை சந்திக்க சென்றனர்.

கொக்கின் தந்திரம் பலிக்க ஆரம்பித்தது. கொக்கு நினைத்தது போலவே நண்டு சென்று அனைத்து மீன்கள் இடமும் விஷயத்தை சொல்லி இருந்தது. மீன்கள் அனைத்தும் தன்னை நெருங்கி வருவதை கண்ட கொக்கு தன்னுடைய அடுத்த திட்டத்தை செயல்படுத்த தயாரானது.

எல்லா மீன்களும் கொக்கிடம் சென்றது. நண்டு அவற்றை தலைமை ஏற்கும் விதமாக முன் நோக்கி சென்றது. மீன்கள் எல்லாம் கொக்கைப் பார்த்து என் நண்பர் நண்டு சொன்னது எல்லாம் உண்மையா என்று கேட்டன. கொக்கும் ஆமாம் உண்மைதான், நான் இப்பொழுது தான் அங்கிருந்து இங்கு வருகிறேன் என்று கூறியது. சரி கொக்கு அண்ணே அப்படி என்றால் நாங்கள் இங்கிருந்து எப்படி தப்பிப்பது. அதற்கு ஒரு வழியை சொல்லுங்களேன் என்று கேட்டன.

எதிர்பார்த்திருந்த கொக்கிற்கு அதன் திட்டத்தை செயல்படுத்த நேரம் கிடைத்தது. கொக்கும் தன்னுடைய திட்டத்தை சொல்ல ஆரம்பித்தது.அந்த கிராமத்தை அடுத்த வனப்பகுதி ஒன்றில் நீண்ட அழகான குளம் ஒன்று உள்ளது. அங்கு எந்த ஒரு தொந்தரவும் உங்களுக்கு இருக்காது. அந்த இடம் எனக்கு நன்றாக தெரியும் உங்களுக்கு சம்மதம் என்றால் நான் உங்களை அந்த குளத்திற்கு தூக்கிச்சன்று விடுகிறேன். தினமும் என்னால் முடிந்த வரை உங்களில் சிலரை தூக்கிச் சென்று மற்றொரு குளத்தில் விட்டுவிடுகிறேன் என்று கேட்டது.

மீனவர்களிடம் இருந்து தப்பிக்க வழியில்லாத மீன்களும் நண்டுகளும் இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. இதை எதிர்பார்த்த கொக்கு தக்க சமயம் பார்த்து தன்னுடைய தந்திரத்தை செயல்படுத்தியது. தினமும் சில மீன்களை தன்னுடைய அலகால் கவ்விக்கண்டு மற்றொரு வனப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவதாக சொல்லி அவற்றை தூக்கிச் சென்றது. ஆனால் அந்தக் கொக்கு குளத்திற்கு தூக்கி செல்லவில்லை, மாறாக செல்லும் வழியில் மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் மீது உள்ள பாறையில் மீன்களை போட்டு அவற்றை உண்டு வந்தது. மீதி இருக்கும் மீன்களை நாளைக்கு சாப்பிட பாறைமேல் காய வைத்துவிட்டு வந்துவிடும்.

இப்படி இரண்டு மூன்று நாட்கள் செய்து கொண்டே வந்தது. பின்பு இன்னும் மீனவர்கள் இங்கு வரவில்லையே என்று யாரேனும் கேட்டால் அவர்கள் நாளை வந்து விடுவார்கள் நாளை மறுநாள் வந்து விடுவார்கள் என்று பயமுறுத்தி மீன்களை தினமும் தூக்கி தூக்கி சென்றது. ஒரு நாள் அந்த மீன்கள் கூட்டத்திற்கு தலைமை ஏற்ற நண்டுக்கு அந்த வனப்பகுதியில் இருக்கும் மற்றொரு குளத்தை பார்ப்பதற்கு மிகுந்த ஆசை வந்தது. இதை வெளிப்படுத்தும் விதமாக அன்று காலை நான் இன்று அந்த குளத்திற்கு வருகிறேன் என்று கூறியது. இதைக் கேட்ட கொக்கும் சரி தினமும் மீன்களையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்,சற்று வித்தியாசமாக இன்று நண்டுசாப்பிடலாம் என்ற எண்ணத்தோடு நண்டை தூக்கிச் சென்றது.

நண்டை தூக்கிச் செல்லும் பொழுது நண்டு கொக்கிடம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் அந்த குலத்திற்கு என்று கேட்டது. அதற்கு இன்னும் சில தூரம் இன்னும் சில தூரம் என்று சொல்லிக் கொண்டே வந்தது கொக்கு. வெகுநேரமாகியும் என்ன அண்ணே நீங்கள் இன்னும் குளத்திற்கு போகவே இல்லையே, என்ன ஆச்சு என்று கேட்டதற்கு! இதோ வந்துவிட்டோம் என்று மலை உச்சியில் இருந்த பாறையை காட்டியது. கொக்கின் முதுகில் உட்கார்ந்திருந்த நண்டுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் அங்கு சில மீன்கள் காய வைக்கப்பட்டு இருந்தது.உயிரற்ற நிலையில் தன் நண்பர்கள் இருப்பதை பார்த்த நண்டு சற்று நிதானித்தது.

கொக்கு ஏதோ தந்திர வேலை செய்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டது நண்டு. ஆணவத்தின் மிகுதியில் கொக்கு சிரித்துக்கொண்டே பாறையின் மீது இறங்குவதற்காக சற்று கீழ் நோக்கி பறக்க ஆரம்பித்தது. தன்னையும் இந்த கொக்கு இப்படி கொன்று தின்று விடும் என்பதை உணர்ந்த நண்டு. அந்தக் கொக்கின் தலையை கொட்ட ஆரம்பித்தது.கொட்டி கொட்டி அந்தக் கொக்கை நண்டு கொன்றது.வலி தாங்க முடியாத கொக்கு மீன்களை காய வைத்திருந்த அதே பாறையின் மீது இறந்த நிலையில் காய்ந்து கொண்டு இருந்தது.கொக்கு கீழே விழுந்த போதும் நண்டு கொக்கின் முதுகிலேயே இருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டது.

நண்டின் சாதுர்யத்தால் கொக்கு மடிந்தது.

கதை சொல்லும் நீதி-சிறுவர் குட்டி கதைகள்

தன் சுயநலத்திற்காக பிற உயிர்களை வதைக்க கூடாது.பொய்யும் புரட்டும் பேசும் பழக்கும் வாழ்க்கையை அழித்துவிடும்.யாரையும் சுலபத்தில் நம்பி விடக் கூடாது.நம்பியவரை கை விடுதலும் கூடாது.தர்மசங்கடமான சூழ்நிலைகளில் மதியை பயன்படுத்த வேண்டும்.நிதானமும் சூதானமும் வாழ்க்கை முழுவதும் தேவை.நண்பன் யார் எதிரி யார் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.எதிரியையும் மதித்து பழக வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top