குட்டி சிரிப்பு கதைகள்-கடவுளை ஏமாற்றிய கஞ்சன்

Vizhimaa
0

ஒரு ஊரில் எண்ணற்ற சொத்துக்களை தன்னகத்தே கொண்ட ஒரு பெரிய பணக்காரன் வாழ்ந்து வந்தானாம். அவரிடத்தில் இல்லாத சொத்துக்களே இல்லையாம். இவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாலும் ஊருக்குள் யாரும் அந்த பணக்காரனை மதிப்பது இல்லையாம். ஏனென்றால் அவன் தன்னிடம் இருக்கும் சொத்துக்களை பயன்படுத்தி இதுவரை யாருக்கும் உதவி செய்ததே இல்லை. ஏன் ஒரு கோயிலுக்கு கூட அன்னதானம் செய்ததில்லை. ஏழை எளியவர்களுக்கு ஒரு உதவியும் செய்ததில்லை. அவ்வளவு சொத்துக்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு தனியாக அனுபவித்து வந்தான். இதனால் ஊருக்குள் அனைவரும் அவனை மகா கஞ்சன் என்றே அழைத்து வந்தனர்.

அவன் முன் அவனுக்கு மரியாதை கொடுத்தாலும் அவனுக்குப் பின்னே அவனை தரக் குறைவாகவே மக்கள் பேசி வந்தனர். அதற்கு ஏற்றார் போலவே அவனும் நடந்து கொண்டான்.மிகவும் சுயநலமாகவும் கஞ்சத்தனமாகவும் நடந்து வந்தான். ஒரு ரூபாய் கூட மற்றவர்களுக்காக செலவு செய்ய மனம் வந்தது இல்லை அவனுக்கு...

இந்த நிலையில் தான் அந்தப் பணக்காரன் ஒருநாள் பக்கத்து நாட்டிற்கு சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுக்கு கடல் பிரயாணம் என்றால் மிகவும் பிடிக்கும். எப்பொழுதும் எங்கு சென்றாலும் பெரும்பாலும் அவன் கடல் மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். அதுபோலவே இந்த முறையும் கடல் வழியாகவே அந்த நாட்டிற்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தான். அதற்காக ஒரு கப்பலில் ஏறினான்.அந்த கப்பலில் அவனுடன் அந்த ஊர் மக்கள் பலரும் வந்தனர். அமைதியாக அந்த கடல் பிரயாணம் தொடங்கியது. ஒரு நாள் இரவு தென்றலுடன் அழகான நிலவைப் பார்த்துக் கொண்டே அந்த பணக்காரன் இரவைக் கழித்தான். மறுநாள் காலையில் கடலில் அலைகள் ஆவேசமாக வீசத் தொடங்கின. அனைவரும் சற்று பயம் கொள்ள ஆரம்பித்தனர். அப்பொழுது அந்த கப்பலும் ஆட்டம் காண ஆரம்பித்தது. கப்பலின் தலைவனிடம் சென்று அனைவரும் கேட்டனர். என்னாச்சு ஏன் கடல் அலைகள் இவ்வளவு வேகமாக வீசுகிறது. அதற்கு அந்த தலைவனும் புயல் வீச தொடங்கியுள்ளது. அதனால்தான் இவ்வளவு ஆக்ரோஷமாக அலைகள் அடிக்கன்றன என்று கூறினார்.

குட்டி சிரிப்பு கதைகள்-நகைச்சுவை கதைகள்

இந்த புயலில் இருந்து நாம் விடுபடுவது என்பது சற்று கடினம் தான். நாம் உயிர் பிழைப்பது இறைவனின் கையில் தான் இருக்கிறது என்று கூறினான்.

இதை கேட்ட அனைவரும் நிலைதடுமாறி கதிகலங்கி போய் நின்றனர். என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். தற்போது இருக்கும் ஒரே வழி இறைவனை பிரார்த்திப்பது ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டு அனைவரும் கடவுளை வணங்க ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனையை தொடங்கினர். கப்பலில் இருந்த அந்த கஞ்சன் பணக்காரனும் முதல்முறையாக தன் உயிருக்காக இறைவனிடம் பிரார்த்திக்க தொடங்கினான். எல்லோரும் அவரவர்களுக்கு முடிந்தவாறு நான் உனக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். அந்த பணக்காரனோ தன்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு காட்டவேண்டும் என்று தன்னுடைய மதிப்பை கூட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து எல்லோர் முன்னிலையிலும் இந்தக் கப்பல் புயலில் இருந்து தப்பித்தால் நான் என் ஒரு பெரிய மாளிகையை விற்று அந்த காசை கோயில் உண்டியலில் என்னுடைய காணிக்கையாக போடுகிறேன் என்று வேண்டிக் கொண்டான். 

கேட்ட ஊர்மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த பணக்காரனை பார்த்தனர் ஏதோ இறைவனே அவனை மாற்றியுள்ளார் என்று நினைத்தனர். இந்த புயல் வந்ததே இவனுடைய கஞ்சத்தனத்தை போக்குவதற்காக தான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர் எல்லோரும் வேண்டியது போலவே புயலும் நின்றது. கப்பல் புயலில் இருந்து சேதம் எதுவும் இன்றி தப்பித்தது. கப்பலில் இருந்த மக்கள் யாருக்கும் எதுவும் நேரவில்லை.

இந்த நிமிடம் கஞ்சன் மனதில் அதாவது அந்த பணக்காரனின் மனதில் குடிகண்டிருந்த நிம்மதியும் சேர்ந்தே போனது. ஏனென்றால் இந்த புயல் நின்று அவனுக்கு எதுவும் நேரமில்லை என்றால் அவன் தன்னுடைய பெரிய மாளிகையை விற்று அதனை கோயிலுக்கு கொடுப்பதாக வேண்டியதுதான்.

தற்போது அந்த கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அவனுடைய வேண்டுதலுக்கு சாட்சியாளர்கள். தற்பொழுது இவனால் அந்த வேண்டுதலை மறைக்கவும் முடியவில்லை. எனவே ஊருக்கு சென்றவுடன் அந்த மாளிகையை விற்று தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தான்.

கப்பல் மீண்டும் அவனுடைய ஊருக்கே சென்றது. எல்லோர் முன்னிலையிலும் தன்னுடைய மாளிகையை விற்பதாக வேண்டிக் கொண்டதால் தற்போது அந்த மாளிகையை விற்க முடிவு செய்தான். இரவெல்லாம் தூக்கம் வரவில்லை எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். இறுதியில் ஒரு முடிவெடுத்து காலையில் சந்தைக்கு சென்று என்னுடைய மாளிகையை விற்கப் போகிறேன் என்றும் அறிவிப்பை வெளியிட்டான். தன்னுடைய மாளிகையின் அருகில் சென்று அங்கே ஒரு பலகையை வைத்து அதன் அருகில் ஒரு பூனைக் குட்டியையும் கட்டி வைத்தான். அந்த பூனை குட்டி அவன் ஆசை ஆசையாய் வளர்த்தது. அங்கே அவனிடம் அந்த மாளிகையை வாங்க வந்தவர்கள் இடத்தில் அந்த மாளிகையின் விலை ஒரு ரூபாய் என்றும் அதன் அருகே அந்த பலகையில் கட்டப்பட்டிருக்கும் பூனைக்குட்டி 50 கோடி ரூபாய் என்றும் விலை வைத்திருந்தான். ஆனால் மாளிகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பூனையையும் சேர்த்து தான் வாங்க வேண்டும் அப்படி வாங்கினால் தான் நான் இந்த மாளிகையை தருவேன் என்றும் சொல்லிவிட்டான்.

தற்பொழுது ஒரு நபர் அந்த மாளிகையோடு பூனையையும் சேர்த்து 50 கோடியே ஒரு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டார். இப்பொழுது அவன் வேண்டிக் கொண்டது போல் மாளிகையை விற்ற அந்த ஒரு ரூபாயை மட்டும் கோயிலுக்கு என்று தானமாக வழங்கினான். அந்த பூனையை விற்ற 50 கோடி ரூபாயை அவனே வைத்துக் கொண்டான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த ஊர் மக்கள் இதுபோல் ஒரு மனித ஜென்மத்தை இதுவரை பார்த்ததில்லை என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலருக்கு கடவுளையே ஏமாற்றிய கஞ்சன் இவன் என்று சிரிப்பும் வந்தது இறுதியில் அவனுடைய கஞ்சத்தனம் வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top