அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு - A.P.J.Abdul Kalam'S interesting Life History in Tamil

Vizhimaa
0
இந்தியாவின் தெற்கான ராமேஸ்வரத்தில் பிறந்து தேசத்திற்கு பெருமை சேர்த்த ஏவுகணை நாயகன்,நம் தேசத்தின் அறிவியல் வளர்ச்சிக்காக அயராது உழைத்த மகான் நம் அப்துல்கலாம் ஐயா அவர்கள்.

Abdulkalam history in Tamil


மாணவர்களின் நலனும் வளனுமே நம் நாட்டின் சொத்து...அவற்றை நல்ல முறையில் செம்மை படுத்தி,அவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்களாக உருவாக்க வேண்டும் என்று எண்ணி அதற்காகவே தன் வாழ்நாளில் இறுதிமூச்சு வரை வாழ்ந்து காட்டிய உத்தமர் அப்துல்கலாமின் வாழ்க்கையை ஒரு சிறு கட்டூரை வடிவிலும்,அவரின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் இங்கு பகிர்ந்துள்ளோம்.

அப்துல் கலாம் பற்றிய சிறு குறிப்பு:

பெயர் - ஏபிஜே அப்துல் கலாம்

பிறந்த தேதி - 1931 அக்டோபர் 15

தந்தை பெயர் - அவுல் பக் ஜெயின் அலாவுதீன் மரைக்காயர்

தாயார் பெயர் - ஆசியம்மா

உடன்பிறந்தோர் இவரையும் சேர்த்து ஏழு பேர்

பிறந்த இடம் - தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம்

திருமணம் -  திருமணம் ஆகாதவர்

கல்வித் தகுதிகள்:

தொடக்கப் பள்ளியை ராமேஸ்வரத்திலும் உயர்நிலைப் பள்ளியை ராமநாதபுரத்திலும் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இளங்கலை பட்டமும் எம் ஐ டி சென்னையில் விமான பொறியாளர் பட்டமும் பெற்றார்.

பணிகள் மற்றும் அவர் வகித்த பதவிகள்

 1. முதுநிலை விஞ்ஞான உதவியாளர் புதுடெல்லி.
 2. ராக்கெட் பொறியாளர் மும்பை
 3. எஸ்எல்வி திட்ட மேலாளர் ஸ்ரீஹரிகோட்டா
 4. இந்திய குடியரசு தலைவர் இந்தியா

அப்துல் கலாமின் கண்டுபிடிப்புகள்:

 • பிரித்வி ஏவுகணை
 • ஆகாஷ் ஏவுகணை
 • திரிசூல் ஏவுகணை
 • நாக் ஏவுகணை
 • அக்னி ஏவுகணை
 • அர்ஜுன் என்ற பீரங்கி
 • விமானி இல்லாத விமானம்
 • போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் தூக்கி நடக்கக்கூடிய அதிக கனம் இல்லாத உதவிக் கருவிகள்.

அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

 • எழுச்சி தீபங்கள்
 • இந்தியா 2020
 • Wings of fire - அக்னி சிறகுகள்
 • Turning Points
 • Ignited Minds
 • The Luminous Sparks(வெளிச்ச தீப்பொறிகள்)
 • Mission India
 • Inspiring Thoughts
 • Developments In Fluid Mechanics And Space Technology
 • Guiding Soul

அப்துல் கலாம் வாங்கிய விருதுகள்:

 • 1981 - இந்திய அரசாங்கத்தால் பத்மவிஷன் விருது வழங்கப்பட்டது.
 • 1990 - இந்திய அரசாங்கத்தால் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
 • 1997 - இந்திய அரசாங்கத்தால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
 • 1998 - இந்திய அரசாங்கத்தால் வீர் சவர்கார்கார் விருது வழங்கப்பட்டது.
 • 2000 - சென்னை, ஆழ்வார்களின் ஆராய்ச்சி மையம் ராமானுஜன் விருது வழங்கப்பட்டது
 • 2007 - இங்கிலாந்தில் உள்ள உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம் சார்பாக அறிவியல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
 • 2007 - இங்கிலாந்தில் உள்ள ராயல் சொசைட்டி சார்பாக கிங்ஸ் சார்லஸ் 2 பதக்கம் வழங்கப்பட்டது
 • 2008 - சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பாக பொறியியல் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
 • 2009 - அமெரிக்காவின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சார்பில் சர்வதேச வோன் காமன் விங்ஸ் வழங்கப்பட்டது.
 • 2009 - அமெரிக்காவின் ஏ எஸ் எம் இ சார்பில் ஹூவர் மெடல் வழங்கப்பட்டது.
 • 2010 - வாட்டர் லூப் பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
 • 2011 - IEEE அமைப்பின் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது
 • 2012 - சைமன் பிரேசர் பல்கலைக்கழகம் சார்பில் சட்டங்களின் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
 • 2014 - எடின்பரோ பல்கலைக்கழகம் சார்பில் அறிவியல் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இறப்பு :

2015 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே மேடையிலேயே மயங்கி விழுந்து தன் உயிரை விட்டார் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள்.

அப்துல் கலாமின் மறைவிற்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியவரின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்திற்கும் மேல்.

தன் அன்னையை பற்றி அப்துல் கலாம் எழுதிய கவிதை;

கடல் அலைகள், பொன் மணல், புனித யாத்திரிகர்கள் நம்பிக்கை, ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ என் அன்னையே!

சொர்க்கத்தின் ஆதரவு கரங்களாய் எனக்கு நீ வாய்த்தாய், போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு வருகின்றன. வாழ்க்கை ஓர் அறைகூவலாய் அமைந்த கொந்தளிப்பான காலம் அது.

கதிரவன் உதிப்பதற்கு பல மணி நேரம் முன்பே எழுந்து நடக்க வேண்டும். வெகு தூரம் கோயில் அடியில் குடியிருந்த ஞான ஆசிரியரிடம் பாடம் கற்க செல்ல வேண்டும் மீண்டும் அரபு பள்ளிக்கு பல மைல் தூரம்... மணல் குன்றுகள் ஏறி இறங்கி புகைவண்டி நிலைய சாலைக்கு சென்று, நாளிதழ் கட்டு எடுத்து வந்து அந்த கோவில் நகரத்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். அப்புறம் தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் இரவு படிக்க செல்லும் முன் மாலையில் அப்பாவுடன் வியாபாரம். இந்த சிறுவனின் வேதனைகளை எல்லாம், அன்னையே நீ அடக்கமான வலிமையால் மாற்றினாய். எல்லாம் வல்ல ஆண்டவனிடமிருந்து மட்டுமே தினசரி ஐந்து முறை தொழுது உன் பிள்ளைகளுக்கு வலிமை சேர்த்தாய்.


தேவைப்பட்டவர்களுடன் உன்னிடம் இருந்து சிறந்தவற்றை நீ பகிர்ந்து கொண்டாய் நீ எப்போதும் கொடுப்பவளாகவே இருந்தாய். இறைவன் உன் மீது வைத்த நம்பிக்கையும் சேர்த்து எதையும் நீ
கொடுத்தாய்.

எனக்கு பத்து வயதாக இருந்தபோது நிகழ்ந்தது. நன்றாக நினைவில் இருக்கிறது. ஒரு பௌர்ணமி நாள் இரவு அது

என் உடன் பிறந்தார் பொறாமை கொள்ள நான் உன் மடியில் படுத்திருந்தேன். என் உலகம் உனக்கு மட்டுமே தெரியும் அன்னையே!

நள்ளிரவில் நான் கண்விழித்தேன் என் முழங்கால் மீது உன் கண்ணீர் துளி பட்டது, உன் பிள்ளையின் வேதனை உனக்குத்தானே தெரியும். என் வேதனையை மென்மையாய் அகற்றினாய்.

உன் அன்பு ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு வலிமை தந்தன. அதைக் கொண்டே நான் இந்த உலகை
எதிர்கொண்டேன்.

என் அன்னையே! நாம் மீண்டும் சந்திப்போம் அந்த மாபெரும் நியாய தீர்ப்பு நாளில்.

அப்துல் கலாமின் பிறப்பும் வளர்ப்பும்:

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற புனித தலங்களில் வடக்கே இருப்பது காசி என்றால் தெற்கே இருப்பது ராமேஸ்வரம் தான் இத்தகைய சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அன்று அவுல் பக்கீர் ஜெயின் அலாவுதீன் மரைக்காயர் ஆசியம்மா என்ற ஏழை குடும்பத்தில் பிறக்கிறார் அப்துல் கலாம். மறைக்காயர் உடைய குடும்பம் மிகவும் பெரிய குடும்பம். கலாம் ஏழாவது குழந்தையாக பிறந்தார். தான் ஒரு இஸ்லாமியராக இருந்த போதிலும் அவரது உற்ற தோழர்கள் இந்து மதத்தையும் கிறிஸ்துவ மதத்தையும் சார்ந்தவர்களாக இருந்தனர். இந்து மத ஒற்றுமையை தனது குழந்தை பருவத்திலேயே பார்த்த கலாம் ஐயா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வந்தார் என்று சொல்வது மிகையாகாது. அம்மாவிடம் நீதிக்கதைகளையும் பிறருக்கு உதவும் பண்பினையும் கற்றுக் கொண்டார்.

சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் கொண்ட கலாம்:


அப்துல் கலாமிற்கு ஆறு வயது இருக்கும் பொழுது அவரது தந்தை ஒரு படகினை காட்டினார். அதனை ஆர்வமுடன் பார்த்தார் அப்துல் கலாம். சில நாட்களில் படகும் சவாரிக்கு தயாரானது. வாடகையின் மூலம் வருமானமும் பெருகி வந்தது. அச்சமயத்தில் திடீரென்று ஒரு நாள் புயல் வீசியது அன்று பல கப்பல்கள் கடலுக்குள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. பாறைகளில் மோதிய படகுகள் சுக்கு நூறாக உடைந்தன. உடைந்த படகினை கண்ட அப்துல் கலாமின் உள்ளமும் உடைந்தது. அதே நேரத்தில் இயற்கையின் அளவற்ற சக்திகளை கண்டு அக்கணமே வியக்க ஆரம்பித்தார். 

கடற்கரை பக்கம் சென்று சிறு வயது முதலே வானில் பறந்து செல்லும் கொக்குகளை பார்க்கும் பழக்கமுடையவர் அப்துல் கலாம். அப்பொழுதெல்லாம் கொக்குகளை போன்று தானும் வானில் பறந்து செல்ல வேண்டும் என்ற ஆசை அவர் உள்ளத்தில் வளர்ந்து கொண்டே வந்தது.

மதவேறுபாடுகளை சிறுவயதிலேயே கடந்த கலாம்:

Abdulkalam history in Tamil

அப்துல் கலாம் தக்க வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்துல் கலாம் உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். படிப்பிலும் ஆர்வம் அதிகம் கொண்டவராக ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதை கொண்டவராகவும் இருந்தார்.

ஒரு நாள் தன் தொடக்கப் பள்ளிக்கு புதிதாக ஒரு ஆசிரியர் வந்தார். அப்துல் கலாம் அவர்கள் எப்போதும் தனது தோழனான உச்சி குடுமி ராமநாதனுடன் தான் உட்கார்ந்து இருப்பார். கலாம் குல்லா அணிந்திருப்பார். அவரோ உச்சிக்குடும்பி போட்டு இருப்பார். இதைக்கண்ட ஆசிரியர் உச்சி குடுமியும் குல்லாவும் ஒன்றாக உட்காருவதா? கூடாது என முடிவெடுத்து கடைசி பென்ச்சில் கலாமை உட்கார செய்தார்.

இவ்விஷயத்தை வீட்டிற்கு சென்றதும் கலாம் தனது பெற்றோரிடம் கூறினார் ராமநாதனும் தன்னுடைய தந்தையிடம் கூறினார். கோபம் தலைக்கேறியவராய் லட்சுமண சாஸ்திரி உடனே ஆசிரியரை வீட்டிற்கு வரவழைத்தார்

சார் பிஞ்சு உள்ளங்களில் சமய வேறுபாடுகளை உருவாக்கி விடாதீர்கள். அந்தப் பாவம் உங்களை தான் சேரும் என்று கடுமையாக கண்டித்தார். அதற்கு அந்த ஆசிரியர் குருக்கள் சார் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி மன்னிப்பு கேட்டார். மறுநாளே தனியே உட்கார வைத்திருந்த கலாமை இராமநாதருடன் சேர்ந்து உட்கார செய்தார். ஆசிரியர் இதிலிருந்து பார்க்கும்போது அப்துல் கலாம் மத வேறுபாடு இன்றி பழகும் பழக்கத்தை தன் தந்தையிடம் இடம் கற்றதோடு மட்டுமின்றி அன்றே வாழ்ந்து காட்டவும் ஆரம்பித்து விட்டார் என்பதை நன்கு அறியலாம்.

மூன்று வயதில் சம்பாதித்த கலாம்:

அப்துல் கலாம் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது அது 1939 ஆம் வருடம் அப்போது மார்க்கெட்டில் புளியங்கொட்டைக்கு ஏகப்பட்ட கிராக்கி எதனால் எப்படி என்பதை எல்லாம் அந்த மூன்று வயதில் அப்துல் கலாமால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னால் முடிந்தவரை புளியங்கொட்டைகளை சேகரித்து மசூதி தெருவில் இருந்த ஒரு மளிகை கடையில் விற்பார். இந்த வியாபாரத்தில் தினமும் ஒரு அணா கிடைக்கும். யுத்தம் பற்றிய கதைகளை எல்லாம் தன் தந்தையிடம் இருந்து தெரிந்து கொண்டார்.

அப்துல் கலாமின் முதல் சம்பளம்:

அப்துல் கலாம் ஐந்தாம் வகுப்பினை முடித்திருந்தார் உள்ளூரில் உயர்நிலைப்பள்ளி இல்லாததினால் ராமநாதபுரம் சென்று உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். தனக்கு எந்த ஒரு வேலை கிடைத்தாலும் அதை தன்னார்வத்துடனும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலும் செய்யும் குணம் மிக்கவர் நம் கலாம் அவர்கள் .பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் தொடர்வண்டியில் ராமநாதபுரம் வந்து சேர்ந்தார் கலாம். அப்போது ஏதாவது வேலை ஒன்று செய்ய வேண்டும் என்று எண்ணினார். ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ராமேஸ்வரம் இருப்பு பாதையில் ஓடும் ரயிலிலிருந்து பத்திரிகைகளை கட்டு கட்டாக வீசுவார்கள் இந்த கட்டுகளை பிடித்துக் கொண்டு வருவதற்கு அப்துல் கலாமின் ஒன்றுவிட்ட சகோதரரான சும்சுதீன் அவர்களுக்கு உதவியாள் தேவைப்பட்டது.
இவர் செய்தித்தாளில் ஏஜென்ட் ஆக இருந்ததினால் எல்லா பத்திரிகைகளையும் தினமும் தவறாமல் படித்து விடுவார்.

ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்த கலாமிற்கு வேலை கிடைத்தது. இப்படித்தான் தனது முதல் சம்பாத்தியத்தை அப்துல் கலாம் தொடங்கினார்.

முதல்முறையாக சுயமாக தான் சம்பாதித்த பணத்தை 50 வருடங்களுக்கு பிறகு இப்போது நினைத்துப் பார்த்தாலும் பெருமிதம் பொங்குகிறது என்று மகிழ்ச்சியுடன் மாணவர்களிடையே உரையாற்றினார் கலாம்.

வீணாக பொழுதைப் போக்காதவர் கலாம்;

சுவார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தால் கலாம் அப்போது அப்பள்ளியில் பணியாற்றி வந்த அய்யாதுரை சாலமன் என்ற ஆசிரியரின் பெரும் அன்பிற்கு உரியவராக கலாம் மாறினார்.

பள்ளி விடுமுறை நாட்களில் அப்துல் கலாம் ராமேஸ்வரம் வந்துவிடுவார் வீணாக பொழுதுகளை வீணடிக்க மாட்டார் உலக செய்திகளை தமது மைத்துனர் ஜலாலுதீன் மூலம் கேட்டறிந்து கொள்வார் அத்துடன் அண்ணன் சும்சுதீன் விற்று வரும் தினமணி செய்தித்தாள்களை தானும் விற்பனை செய்து அண்ணனுக்கு உறுதுணையாக இருந்தார். ஒரே கல்லில் இரு மாங்காய் என்பது போல ஒரு பக்கம் செய்தித்தாள் விற்பனையும் மறுபக்கம் அதே செய்தித்தாளில் வரும் செய்திகளை படித்துக் கொள்வதும் என பொழுதுகளை ஆக்கத்துடன் செயல்படுத்தினார்.

கல்லூரியில் கலாம்:

ராமநாதபுரத்தில் தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி கல்விக்காக திருச்சியில் உள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்தார். முதல் புதுமுக வகுப்பு பின்பு அதே கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பும் படித்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்தார் அவர் தங்கி இருந்த அறையில் இந்து கிறிஸ்துவ மாணவர்கள் இருந்தனர்.
 இந்து மதத்தை சார்ந்தவர்கள் பகவத் கீதையிணையும் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் பைபிள் வசனத்தையும் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்கள் புனித குரானையும் வாசித்து வந்தனர். மும்மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமை கலந்த நேசத்துடன் பழகி வந்தனர்.
கடவுள் ஒருவர்தான் அவரை வழிபடும் முறை தான் வெவ்வேறு என்பதனை கலாம் மற்றவர்களிடம் கூறி வந்தார். தனக்கு கல்வி கற்று தந்த தனது ஆசிரியர்களை தெய்வமாக கருதி போற்றி வணங்கி வந்தார் ஆசிரியர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டார்.

சாதனை எண்ணம் கொண்ட கலாம்:

உலகில் தலை சிறந்த அறிவியல் கணித வல்லுனர்களை பற்றிய வரலாறுகளை படித்து வந்த கலாமின் எண்ணத்தில் தானும் அறிவியல் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதற்காகவே வானவியல் பற்றிய நூல்களை அதிகம் படிக்கத் தொடங்கினார். நான்காண்டுகள் பட்டப்படிப்பினை படித்து இயற்பியல் பட்டதாரி ஆகி திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். கலாம் விமான பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் எம்ஐடி என்ற தொழில்நுட்ப பயிலகத்தில் விண்ணப்பம் ஒன்றை வாங்கி விண்ணப்பித்தும் வைத்தார்.

எம் ஐ டி கல்லூரியில் கலாம் சேர்ந்த கதை:

சென்னை எம்ஐடியில் படிப்பது என்றால் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல ஆனால் எம்ஐடியில் இருந்து கலாம் அவர்கள் படிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கல்லூரி கட்டணமாக ரூபாய் 1600 கட்ட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தந்தையால் அவ்வளவு பணத்தை தர முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அப்துல் கலாம் மனதளவில் மிகவும் சோர்ந்து போனார். ஒரு நேரத்தில் தன்னிடம் பணம் இல்லை என்பதால் தொழில்நுட்ப கல்வியை விட்டு விடத்தான் வேண்டுமா என்று கவலை கொண்டார் கலாம். பின்பு ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் தன்னுடைய சகோதரியிடம் கேட்டுப் பார்த்தார். அப்துல் கலாமின் விருப்பத்தை தெரிந்து கொண்ட சகோதரி ஜோஹாரா எவ்வித மறுபேச்சும் இன்றி உடனே தனது கைகளில் அணிந்திருந்த தங்க வளையலையும் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் அடகு வைத்து கலாம் கேட்ட பணத்தை கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட கலாமிற்கு  ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு எம்ஐடி கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி வளாகத்தில் சுற்றி பார்த்து வந்தபோது விமானம் ஒன்று பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டார் வெகு ஆர்வத்துடன் அவர் விமானத்தை சுற்றி சுற்றி வந்தார். அதன் பாகங்களை உன்னிப்பாக கவனித்து வந்ததை கண்ட ஆசிரியர்கள் கலாமை பாராட்டினர். காற்றின் வேகம் செயல்திறன் விளைவுகள் பற்றிய காற்று இயக்க அறிவியலை பேராசிரியர்கள் பண்டலை பாண்டர், நரசிங்க ராவ் ஆகியோர் அவரவர்களின் துறைகளில் வல்லுநராக விளங்கி வந்தனர். அவர்களிடம் மிக அடக்கத்துடன் நடந்து கொண்டு கல்வியையும் கற்றுக்கொண்டு உலகம் போற்றும் அறிவியல் மேதையாக திகழ வேண்டும் என்று கலாம் விரும்பினார். அதற்காக ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் போது மிகவும் உன்னிப்பாக குறிப்புகளையும் எடுத்துக் கொண்டார்.

தமிழின் மீது ஆர்வம் கொண்டவர் கலாம்:

அறிவியலிலும் பொறியியலிலும் ஆர்வம் காட்டி வந்த கலாம், தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் விளைவாக கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி அனைத்திலும் பங்கு பெற்று வெற்றி பெற்று வந்தார்.

அதனை அறிந்த பேராசிரியர்கள் வெகுவாக பாராட்டி ஊக்கப்படுத்தி வந்தனர்.ஒருமுறை எம்.ஐ.டி நடத்திய கட்டுரை போட்டியில் ஆகாய விமானம் கட்டுவோம் என்ற தலைப்பு இடம் பெற்று இருந்தது ஆர்வமுடன் அக்கட்டுரை போட்டியில் கலந்து கொண்டார். கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்ததோடு ஆனந்த விகடன் வார இதழிலும் பிரசுரம் ஆயிற்று அதன் ஆசிரியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நாட்டுப்பற்றையும் மொழி பற்றியும் அவர் தனது இரு கண்களாக போற்றி வந்தார்.

கடின உழைப்பை ஒருபோதும் கைவிடாதவர் கலாம்:

தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த போதிலும் செயல்திட்ட பாடங்கள் பாக்கி இருந்தது. போர் விமானம் ஒன்றை வடிவமைக்கும் பணி குழுவினருக்கு வழங்கப்பட்டது கலாம் மிகுந்த உற்சாகத்துடன் செயல் இறங்கினார் குறிப்பிட்ட நாளில் திட்டம் நிறைவு பெறவில்லை அதை கண்ட பேராசிரியர் கலாம் குழுவினரை மிகவும் கடிந்து கொண்டனர் விஷயம் அறிந்த கலாம் பேராசிரியரை சமாதானம் செய்த பின்பு செயல் திட்டத்தில் இறங்குவோம் என மெல்ல பேராசிரியரிடம் சென்று ஐயா இன்னும் ஒரு மாதம் அவகாசம் கொடுங்க போர் விமானத்தை செய்து முடித்து விடுகிறோம் என்று கேட்டார். அதற்கு பேராசிரியர் இந்த பாருங்க மாணவர்களே போனால் போகிறது இன்னும் மூன்று நாட்களுக்குள் இந்த திட்டத்தை முடித்து விட வேண்டும் இல்லையென்றால் உங்கள் உதவி தொகை நிறுத்தப்படும் எந்த வித தயவு தாட்சமும் கிடையாது என்று கோபத்துடன் கூறிவிட்டு சென்றார்.

அதைக் கேட்ட கலாம் வசதி இல்லாத குடும்பத்தில் இருந்து படிக்க வந்திருக்கும் தனக்கு, அரசு தரும் உதவித்தொகை தான் பெரும் உதவியாக இருக்கிறது. இப்பொழுது அந்த பணம் நிறுத்தப்பட்டால் நம் தொழில் கல்வி என்னவாவது? படிப்பு பாதித்து விடுமே என்று கலாம் பதறிப் போனார் ஆனாலும் மனம் தளரவில்லை. இரவு பகல் பாராது, ஊன் உறக்கத்தை மறந்து திட்டம் ஒன்றினையே பெரிதெனக் கொண்டு, உள்ள துடிப்புடன் செயல் இறங்கினார். கடுமையாக உழைத்தார். 30 நாட்களில் முடித்து தருகிறேன் என்று கெஞ்சி கேட்ட கலாம் அந்தத் திட்டத்தை மூன்றே நாட்களில் வெற்றிகரமாக முடித்து விட்டார். பேராசிரியர்களுக்கு ஒரே வியப்பானது. மாணவர்களே நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை விரட்டி பயமுறுத்தினேன் ஆனால் நீங்களும் அதை சவாலாக ஏற்றுக் கொண்டு மூன்றே நாட்களில் முடித்து விட்டீர்கள் அப்படி திறமை மிக்க உங்களது முயற்சியையும் உழைப்பையும் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை என்று மனம் திறந்து பாராட்டினார்.

அப்துல் கலாமின் முதல் பாராட்டு:

கல்லூரியில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. தேநீர் விருந்துக்கு பிறகு மாணவர்கள் தத்தம் துறை பேராசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆயத்தமாயினர். கலாம் மட்டும் மூன்றாம் வரிசையில் நின்றிருந்தார். ஏற்கனவே குள்ளமான உருவம் கொண்டிருந்த மையால் கூட்டத்தோடு கூட்டமாக அவரது உருவம் தெரியவில்லை. அதனை குழு பேராசிரியர் கண்டு முதல் வரிசைக்கு கலாமை வரச் சொன்னார். அப்பொழுது அப்துல் கலாம் நீ தலை சிறந்த மாணவன் எதிர்காலத்தில் புகழ்பெறப் போகிறவர் எங்களுக்கும் புகழ் சேர்க்க போகிறவர் அதனால் தயங்காமல் முதல் வரிசையில் உட்காருங்கள் என்று கூறினார் பேராசிரியர் ஸ்பான்டர். இதைக் கேட்ட கலாம் மனம் நெகிழ்ந்தார் இன்று அதை மெய்ப்பித்து காட்டிவிட்டார் நம் அப்துல் கலாம் அவர்கள்.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்கில் கலாம்:

கல்லூரியில் எழுத்து தேர்வுகள் முடிந்ததும் அப்துல் கலாம் பெங்களூரு சென்றார் அங்கே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அங்கு விமானத்தை பறக்க வைக்கும் புரபெல்லர் இயந்திரங்கள் பற்றி நன்கு தெரிந்து கொண்டார். விமானத்தை இயக்குபவர்களும் பயிற்சி அளித்தவர்களும் விமான பொறியியல் பட்டதாரிகள் இல்லை, இருப்பினும் அனுபவ அறிவால் இயந்திரங்களை இயக்கவும் பழுதுபார்க்கவும் கற்றுக்கொண்டவர்கள் என்பதனை அறிந்து கொண்ட கலாம் மிகவும் வியந்து போனார். எம் ஐ டி யின் சான்றிதழ் கொண்டு விமானப்படையில் பணிபுரிய விண்ணப்பம் செய்திருந்தார். டேராடூனில் உள்ள விமானப்படை தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் வேலை பெறும் வாய்ப்பினை கலாம் இழந்தார். நேர்முகத் தேர்வில
 தோல்வியடைந்த அப்துல் கலாம் மன நிம்மதி இன்றி மன அமைதி தேடி ரிஷிகேஷ் சென்றார். அங்கிருந்த சுவாமி சிவானந்தரை சந்தித்து தன் மனவேதனையை கூறினார் இதனை தோல்வி என்று நீ எண்ண வேண்டாம். விமானப்படை விமானியாக நீ ஆக வேண்டும் என்று உனக்கு விதிக்கப்படவில்லை. உனக்கென்று எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அது விரைவில் கிட்டும். வெற்றி கொடியை நாட்டு. கவலை வேண்டாம் சென்று வா... என்று சுவாமிகள் ஆசீர்வதித்து அனுப்பினார். பின்னர் ரிஷிகேசிலிருந்து நேரடியாக புதுடில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்விற்கு சென்றார் அதில் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டதின் பேரில் முதுநிலை விஞ்ஞான உதவியாளராக பணியில் நியமிக்கப்பட்டார். அதை எண்ணி பெருமிதம் கொண்டார் கலாம் ஐயா அவர்கள்.


எடுத்த பணியை முடிப்பதில் வல்லவர் அப்துல் கலாம்:

பணியில் சேர்ந்த உடனேயே விமானத்தை வடிவமைக்கும் பொறுப்பு கலாம் இடம் ஒப்படைக்கப்பட்டது. விமான வடிவமைப்பு நுட்பங்கள் பற்றிய பயிற்சி பெறுவதற்காக அப்துல் கலாம் அவர்கள் காட்டூர் சென்றார். அங்கு நாட் எம் கே ஜே விமானம் இயங்கும் விதம் அதன் செயல்பாடுகளை எல்லாம் நன்கு அறிந்து கொண்டார். புதுடில்லி திரும்பி வந்து விமான வடிவமைப்புகள் பலவற்றை ஆராய்ந்து வந்தார். மூன்று ஆண்டுகள் கடந்தன ஓவர் ரக விமானத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார் கலாம். அதனைக் கண்ட பொறாமை பிடித்த மூத்த விஞ்ஞானிகள் கலாம் குழுவால் ஓனாக விமானத்தை உருவாக்குவது என்பது கானல் நீரை போன்றது என்று சொல்லி மூத்த விஞ்ஞானிகள் கேலியும் கிண்டலும் செய்தனர். மற்றவர்கள் தன்னை ஏளனமாகவும் ஏகத்தாளமாகவும் நினைப்பதனை பொருட்படுத்தாத அப்துல் கலாம் எடுத்த பணியை முடித்து காட்டுவதில் எள்ளளவும் சோர்வு இல்லாமல் கடுமையாக உழைத்தார். ஒரு வருடத்தில் கலாம் நினைத்தது போன்று ரோவர் ரக விமானத்தை வெற்றிகரமாக உருவாக்கினார். உருவாக்கப்பட்ட விமானத்திற்கு "நந்தி" என்ற பெயரை சூட்டினார்கள் "இங்கே இருக்கும் வானூர்தியை உருவாக்கியது கருவிகள் அல்ல திறமை வாய்ந்த பொறியாளர்கள் தான். இது பார்ப்பதற்காக அல்ல பரப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்று பெருமையுடன் அப்துல் கலாம் கூறி வந்தார்" ஆனாலும் ஹோவர் ரக விமானத்தை சில தேவையற்ற காரணங்களை காட்டி அவற்றை இராணுவத்தில் பயன்படுத்தக் கூடாது என்று ஒதுக்கி வைத்து விட்டனர் அதற்காக கலாம் மனம் தளரவில்லை.

ராக்கெட் பொறியாளராக அப்துல் கலாம் மாறிய கதை:

அப்துல் கலாமின் அறிவியல் ஆற்றலையும் நந்தி விமானம் பற்றியும் நன்கு கேள்விப்பட்டிருந்தார் பேராசிரியர் எம். ஜி. கே மேனன் மும்பையில் இயங்கி வந்த இந்திய விண்வெளி ஆய்வுக்குழு செயல்பட்டு வந்ததில் ராக்கெட் பொறியாளர் தேவை என்ற விபரத்தைச் சொல்லி அப்துல் கலாமை விண்ணப்பிக்க செய்தார்.
Abdulkalam history in Tamil

 டாட்டா ஆய்வு நிலையத்தில் இயக்குனரான மேனன் மும்பை தேர்வு குழுவினர் அப்துல் கலாமின் அறிவியல் மேதை தன்மையைக் கண்டு வியந்தார்கள். அன்றே ராக்கெட் பொறியாளர் பதவியினை அப்துல் கலாமுக்கு கொடுத்தனர். நந்தி விமான தயாரிப்பு தோல்வி என்று மற்றவர்களால் கூறப்பட்டாலும் மிகச்சிறந்த நல்ல வாய்ப்பு கலாமை தேடி வருவதற்கு நந்தி விமானம் ஒரு முக்கியமான பங்கு வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

நல்ல நல்ல வாய்ப்புகள் எல்லாம் அப்துல் கலாமை தேடி வந்த கதை:

திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா ராக்கேட் ஏழு தளத்தில் கலாம், உன்னதமான ஏவுகணை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருந்தார். தும்பாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பயிற்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றிருந்தார். அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில் ஹாம்ப்டன் என்ற இடத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா உள்ளது. அங்கு விண்வெளி சம்பந்தமான பல நுணுக்கங்களை கண்டறிந்தார். அங்கும் தனது இடைவிடாத சிந்தனையாலும் அயராத உழைப்பாலும் துவளாத மனதாலும் மிக கடினமாக கருதக்கூடிய தொழில் நுணுக்கங்களையும் தெள்ளத்தெளிவாக கண்டறிந்தார் நம் விஞ்ஞான மேதை.

அப்துல் கலாமின் முதல் ராக்கெட்:

அமெரிக்காவில் ஆறு மாத பயிற்சிகளை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார் கலாம். இந்தியா வந்த அப்துல் கலாம், கையோடு 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாளில் இந்தியாவின் முதல் ராக்கெட்டை தயாரித்தார். தயாரான ராக்கெட் களை லாரிமூலம் ராக்கெட் ஏவுதலத்திற்கு கலாமின் குழுவினர் கொண்டு சென்றனர். கிரேன் மூலம் ராக்கெட்டை லாரியிலிருந்து ஏவுதலத்திற்கு பொருத்துவதற்காக தயாராக இருந்தனர்‌. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பக்கமாக ராக்கெட் சரிய தொடங்கியது. அந்த வேலையில் கிரேனை சரி செய்வது என்பது இயலாத காரியம், சற்றும் தாமதிக்காமல் கலாமும் அவரது குழுவினரும் தங்களது கைகளாலேயே ராக்கெட் தூக்கி நிறுத்தினர். நேரத்திற்கெல்லாம் ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது. பயங்கர சத்தத்துடன் விண்ணை நோக்கி ராக்கெட் சென்றது, அனைவரையும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஆராய்ச்சி என்றால் சும்மாவா?

ராக்கெட் வெற்றிக்கு பின்பு செயற்கைக்கோள் ஏவுகலம் பற்றி ஆராய்ச்சிகளை தொடர்ந்தனர். தும்பா ராக்கெட் தளத்தில் இரவு பகல் பாராது கலாமும் சக விஞ்ஞானியான சுதாகர் என்பவரும் ராக்கெட் புறப்படுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது சோடியத்தையும் தெர்மட்டயும் கலந்து எரிபொருள் தயாரித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத வகையில் சுதாகரின் நெற்றியில் இருந்து ஒரு துளி வியர்வை சோடியம் கலவையில் விழுந்துவிட்டது அவ்வளவுதான் அடுத்த நொடியில் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டது. அதில் ஆய்வுக்கூடமே குலுங்கியது. அறைக்குள் தீ பரவத் தொடங்கியது தண்ணீரால் அத்தீயை அணைக்கவே கூடாது அவ்வாறு அழைப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்திலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது என்ன செய்வது எப்படி உயிரை காப்பாற்றிக் கொள்வது சிந்திக்க கூட அவகாசம் இல்லை.

அறிவியல் விஞ்ஞானி சுதாகர் கண்ணாடி ஜன்னல்களை தன் கைகளால் உடைத்தார் முதலில் கலாமை தூக்கி வெளியேற்றினார். அதன் பின்பு தானும் வெளியே குதித்து உயிர் தப்பினார். உடனே இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதன் மூலம் பூரண நலம் பெற்றார் அப்துல் கலாம். அறிவியல் ஆராய்ச்சி என்பது தோல்விகள் தடங்கல்கள் ஆபத்துகள் நிறைந்தது தான், திடமான மனமும் தீர்க்கமான நுண்ணறிவும் கொண்டவர்களால் அத்துறையில் சாதனை படைக்க முடியும் அதனால்தான் உலகம் அத்தகைய அறிவியல் மேதைகளை என்றும் போற்றிக் கொண்டாடி வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சிகளில் கலாமின் பங்கு;

விண்வெளி ஆராய்ச்சியில் கலாமின் குருவாக விளங்கி வந்தவர் டாக்டர் விக்ரம் சாராபாய். அவர் தலைசிறந்த விஞ்ஞானி ஆவார் தன்னுடன் பணியாற்றும் விஞ்ஞானிகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். கோபம் என்றால் என்னவென்று அறியாதவர் யாரேனும் தவறுகள் செய்தால் மென்மையாக சுட்டிக்காட்டும் பண்புள்ளவர் விக்ரம் சாராபாய் ஏவுகணை திட்ட விபரங்களை பற்றி அவ்வப்போது அப்துல் கலாம் இடமும் அவரது விஞ்ஞானிகள் குழுவிடமும் கலந்துரையாடுவார். ஒரு நாள் புதிதாக உருவாக்க உள்ள எஸ்எல்வி விண்கலம் பற்றி அப்துல் கலாமிடம் சில அவசர தகவல்களை சாராபாய் பெற விரும்பினார். விஷயம் அறிந்து தில்லியில் இருந்து அப்துல் கலாம் உடனடியாக திரும்பினார் ஆனால் அப்துல் கலாம் வருவதற்குள் எதிர்பாராத விதமாக விக்ரம் சாராபாய் மாரடைப்பினாள் மரணத்தை எய்திவிட்டார். இந்நிகழ்ச்சி அப்துல்கலாமை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஐந்தாண்டுகள் விக்ரம் சாராபாய் உடன் மிக நெருங்கி பழகி வந்தவர் அப்துல் கலாம். தன்னுடைய குருவின் எதிர்பாராத திடீர் மரணம் ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. மனதை ஓரளவு தேற்றிக்கொண்ட அப்துல் கலாம் மீண்டும் ஆராய்ச்சியில் பணியினை தொடர்ந்தார். தும்பா வளாகத்தில் உள்ள எல்லா அமைப்புகளையும் இணைத்து விண்வெளி மையமாக உருவாக்க முயற்சி மேற்கொண்டது.
அதற்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் என்று பெயர் வைக்கப்பட்டது முதல் தலைவராக விஞ்ஞானி டாக்டர் பிரம்ம பிரகாஷ் பொறுப்பேற்றார். எஸ் எல்வி திட்டம் மேலாளராக அப்துல் கலாம் நியமிக்கப்பட்டார். பூமியை சுற்றி 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் 40 கிலோமீட்டர் வேகத்தில் செயற்கைக்கோளை ஏவ வேண்டும் என்ற குறிக்கோளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எஸ்எல்வியின் முக்கிய நோக்கமாகும். அதேசமயம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் ராக்கெட் ஏவுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் திட்டமிட்டார்.
எல்லா பணிகளையும் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக அப்துல் கலாம் இறைவனைத் தொழுது பணிகளை தொடங்கினார். எந்த திட்டத்தையும் தாண்டோன்றித்தனமாக முடிவு எடுக்காமல் எல்லா நிலைத்திட்டங்களிலும் சக விஞ்ஞானிகள் குழுவை கலந்து ஆலோசித்து பிறகு முடிவுகளை மேற்கொண்டார். அத்தோடு பொறுப்புகளையும் பகிர்ந்து அளித்து திட்டங்களை விரைவாக்கினார்..

250 துணை அசம்பிலி பிரிவுகளையும் 44 பெரிய துணை சாதனங்களையும் உதிரி பாகங்கள் 10 லட்சத்தையும் செய்து முடிக்க வேண்டியது இஸ்ரோவின் பொறுப்பானது. ஏனெனில் இந்தியாவின் விண்வெளி திட்டங்களை ஆராய்ந்து அதன்படி செயல்படுத்தி தருவது இஸ்ரோவின் பொறுப்பு என்று நிபந்தனை இருந்தது. இஸ்ரோவின் தலைவராக பேராசிரியர் தவான் இருந்தார். அவர் கலாமிற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளித்து வந்தார். அகமதாபாத் திருநெல்வேலி பெங்களூர் திருவனந்தபுரம் போன்ற இடங்களில் ஆய்வு மையங்கள் இருந்தபோதிலும் ஆந்திராவின் கிழக்கு கடற்கரை ஓரம் உள்ள ஸ்ரீஹரிகோட்டா தான் இஸ்ரோவின் முக்கிய ஏவுதளமாக இருந்தது. இங்கு திடநிலை எரிபொருள்கள் பெருமளவில் தயாரித்தலும் எரிபொருள் நிரப்பிய பின்பு இயந்திரங்களை சோதித்துப் பார்ப்பதும் இந்த ஏவுதலத்தில் தான். மேலும் ராக்கெட்டை உரிய பாதையில் செலுத்துதல் செயற்கைக்கோளை அதற்குரிய சுற்றுவட்ட பாதையில் கண்காணித்தல் உத்தரவுகளை பிறப்பித்து கட்டுப்படுத்துதல் செயற்கைக்கோள்களிடமிருந்து தகவல் பெறுதல் போன்றவற்றை இஸ்ரோ டெமிட்ரி டிராக்கில் கமாண்டிங் நெட்வொர்க் கிஸ் த ராக் கவனித்துக் கொள்ளும் இதன் தலைமை நிலையம் பெங்களூரில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா திருவனந்தபுரம் லக்னோ கார்னிக்கோபார் மோர்சியஸ் ஆகிய இடங்களில் உள்ள மையங்களின் உதவியுடன் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் கையாளப்படுகின்றன.

கலாமிற்கு வந்த சோதனைகள்:

எஸ்எல்வி ராக்கெட்டின் செயல் திறனை கணக்கிடுவதற்காக ரோகிணி செயற்கைக்கோளை விண்வெளியில் ஏவ திட்டமிடப்பட்டது. முதல் கட்ட மோட்டாரை பரிசோதிப்பதற்காக அப்துல் கலாமும் அவரது குழுவினரும் முழுமூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயம் பார்த்து, தன் தொழிற்கல்விக்காக நகைகளை அடகு வைத்துக் கொடுத்த ஜுஹாரா மரணம் அடைந்த செய்தி வந்தது. அச்செய்தியைக் கேட்டவுடன் மிகவும் வருந்தினார் அப்துல் கலாம். அதனை அறிந்த கலாமின் தந்தை எல்லாம் கடவுள் விருப்பப்படி தான் நடக்கிறது. "இரவை படைத்து இரவுக்கு ஒளி தந்து ஓய்வெடுக்க உறக்கத்தை தந்தவர் அவர்தான்" ஜலாலுதீன் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கிறார். அல்லாஹ்வின் ஆணைப்படி தான் எல்லாமே நடந்து வருகிறது. இதில் கவலைப்படுவதில் ஒன்றுமில்லை என்று கலாமிற்கு ஆறுதல் மொழி கூறினார். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்பு தந்தையின் ஆறுதலின் பேரில் தும்பாவிற்கு திரும்பினார். சில நாட்கள் வரை அப்துல் கலாமின் மனதிலிருந்து வேதனை நீங்காமல் இருந்தது. அதனை கண்ட இஸ்ரோவின் தலைவர் பேராசிரியர் "தான் அப்துல்" கலாமிடம் அன்பாக பேசி வேதனை சுமையினை குறைத்தார். அதன் பின்பு மீண்டும் தமது ராக்கெட் பணியில் மும்மரமானார் அப்துல் கலாம். நான்கு ராக்கெட் மோட்டார்கள் தயாரித்ததோடு அது சம்பந்தமான பல பணிகளை இடைவெளி இல்லாமல் செய்து வந்தார். இந்த கடினமான பணிகளை செய்ய கலாமிற்கு ஒய் எஸ் ராஜன் என்ற விஞ்ஞானி உறுதுணையாக இருந்தார்.

Abdulkalam history in Tamil

அப்துல் கலாமின் தந்தை மறைவு:

அப்துல் கலாம் தீவிரமாக தனது பணியில் ஈடுபட்டிருக்கும் போது மற்றும் ஓர் பேரிடியான செய்தி வந்தது. அன்பையும் பண்பையும் ஊட்டி பாசமுடன் வளர்த்து வந்த தந்தை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்பதுதான் அது. உடனே ராமேஸ்வரத்திற்கு விரைந்து சென்றார் அப்துல் கலாம். தந்தையின் இறுதி சடங்குகள் முடிந்த பின்பு தாயிடமும் உற்றார் உறவினரிடமும் பிரியா விடை பெற்று துன்பா ராக்கெட்டு நிலையத்திற்கு சென்றார். அப்துல் கலாம் தனது தந்தையின் நினைவு அவரை விட்டு அகலாமல் இருந்தது. அங்கு சென்றவுடன் எஸ் எல் வி ராக்கெட்டை வடிவமைப்பதற்கு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு அதனை வடிவமைப்புக்கு உட்படுத்தினார். இந்த பணிகளை பார்த்து தான் பாரத பிரதமர் இந்திரா காந்தி 1978 ஆம் ஆண்டு இந்தியா முதல் செயற்கைக்கோள் ஏவுகணையை பறக்க விடும் என்று அறிவித்தார். அப்போது பிரான்ஸ் நாட்டில் டைமன் ரகத்துடன் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த ராக்கெட்டினை பறக்க விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில கோளாறுகளால் ராக்கெட் பறக்க வில்லை. அதனால் ராக்கெட்டில் ஏற்பட்ட பழுதினை சரி செய்வது பற்றி நேரடியாக பேசுவதற்காக பிரான்ஸிற்கு சென்றார் அப்துல் கலாம்.

அப்துல் கலாமின் தாயார் மரணம்;

அந்த சமயத்தில் தான் இன்னொரு பேரதிர்ச்சியான செய்தி ஒன்று வந்தது. தன்னை 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்த ஆளாக்கிய தாயார் இறந்துவிட்ட செய்தி தான் அது. இவ்வாறாக நமது அப்துல் கலாம் அவர்களை துன்பங்களும் துயரங்களும் மரண செய்திகளும் இடையூறு செய்த வண்ணம் இருந்தது. திட மனதுடன் ஆராய்ச்சி பாதையில் அப்துல் கலாம் பயணித்தார். இந்த துயர நிலையிலும் அப்துல் கலாம், ஆராய்ச்சி பணியே மிக முக்கியமானது என்று நம்பினார். அடுக்கடுக்கான மரணங்கள் துன்பங்கள் சோகங்கள் வந்து வந்து அலை மோதின என்றாலும் அப்துல் கலாமின் மனதில் ஒரு திட நிலை ஏற்பட்டது. அதாவது "அவர்களின் இவ்வுலகப் பணி முடிந்து விட்டது. அவர்களை நான் அழைத்துக் கொண்டேன் அதற்காக நீ ஏன் வருந்துகிறாய்? உன் முன்னாள் இருக்கிற ஒப்பற்ற பணிகளில் நீ உன் கவனத்தை செலுத்து உன்னுடைய செயல்கள் மூலம் என்னை பெருமைப்படுத்து என்று இறைவன் அப்துல் கலாமிற்கு ஆணை இடுவதாக அப்துல் கலாம் எண்ணி மனதை தேற்றி வந்தார்". இருப்பினும் உடனிருந்து அவர்களின் வற்புறுத்தலின் பெயரில் ராமேஸ்வரம் சென்றார். தாய்க்கான இறுதி கடன்களை எல்லாம் முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்றார். எல்லா சோகங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு ராக்கெட் பறக்க விடும் பணியில் மிகுந்த கவனம் செலுத்தினார். தேனீ போல் சுறுசுறுப்பாக இயங்கலானார். விடுமுறை நாட்கள் என்றும் பாராமல் உழைத்தார். எல்லா துன்ப துயரங்களை எல்லாம் மறந்து எஸ்எல்வி ஒன்றே நமது நோக்கம், செயல் எல்லாமே என உழைத்தார்.

உள்ளத்தில் உறுதி கொண்டவர் அப்துல் கலாம்;

ராக்கெட்டின் இரண்டாம் கட்ட சோதனைகளில் கலாம் முழுமூச்சுடன் செயல்பட்டு வந்தார். ராக்கெட்டை படுக்க வைத்து சோதனை நடக்கும் போது நைட்ரிக் ஆசிட் நிரப்பப்பட்டிருந்த ஆக்கிடைசர் டேங்க் திடீரென்று வெடித்து சிதறியது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது ஆசிட் தெரித்து விழுந்தது. பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை உடனடியாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அப்துல் கலாம் மருத்துவமனையில் இருந்து காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அதன் பின்பு பல சோதனைகளை கடந்து கடைசியாக எஸ்எல்வி விண்ணில் செலுத்த தயாரானது. 23 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட எஸ் எல் வி ராக்கெட் 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் நாளில் விண்ணில் செலுத்தப்பட்டது. முதல் கட்டத்தை ராக்கெட் வெற்றிகரமாக தாண்டி அதனை கண்டு மகிழ்ந்து கொண்ட நேரத்தில் இரண்டாவது கட்டத்தை தாண்டும் நிலையில் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து சில நொடிகளில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு 500 கிலோமீட்டர் தொலைவில் கடலில் விழுந்தது.

தோல்வியை தோல்வியடையச் செய்தவர் அப்துல் கலாம்;

பல ஆண்டுகள் அயராத உழைப்பினை மேற்கொண்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து கடுமையான பணியினை மேற்கொண்ட போதிலும் எல்லாமே கணப்பொழுதில் தூள்தூளாக நொறுங்கி விட்டது. துடித்துப் போனார் அப்துல் கலாம். தோல்வியினால் மனம் துவண்டார் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தார். எஸ்.எல்.வி தோல்விக்கான பொறுப்பை அப்துல் கலாம் தானே ஏற்றுக் கொண்டார். இதனை அறிந்த பேராசிரியர் தவான், "கவலைகள் கிடைக்கட்டும் மறந்து விடுங்கள் காரியம் நடக்கட்டும்". "வெற்றி தோல்வி என்பது சகஜம்தான் அதற்காக நீங்கள் ஆராய்ச்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டாம்" தொடர்ந்து ஆராய்ச்சிகளை தொடருங்கள் என்று அப்துல் கலாமிடம் கேட்டுக் கொண்டதோடு அப்துல் கலாம் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார் என்று மற்ற விஞ்ஞானிகளிடமும் தெரிவித்து அப்துல்கலாமை மிகவும் உற்சாகப்படுத்தினார். எஸ் எல் வி ராக்கெட் சோதனை தோல்வியில் முடிந்ததால் பத்திரிகைகள் கேலி செய்தனர். பிடிக்காத சிலர் கைகொட்டி சிரித்தனர். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் பார்க்கிறேன் என்பது போன்று எஸ் எல் வி 3 ஏவுகணை மீண்டும் விண்ணில் செலுத்த தயாரானது 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாளில் ஏவுதலத்தை இயக்கினார். முதல் ராக்கெட்டை போலவே இந்த ராக்கெட்டும் தோல்வியில் முடியும் என்று பொறாமைக்காரர்கள் கூறினார்கள். ஆனால் பொறாமைக்காரர்கள் எதிர்பார்த்தது போல ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. சில நொடிகளில் மண்ணுக்கு வரவில்லை விண்ணை நோக்கிய நான்காவது கட்டத்தையும் தாண்டி ஆறுநூறு நொடிகள் கடந்தன அத்துடன் இரண்டு நிமிடங்களில் ரோகிணி அதன் பாதையில் நகர தொடங்கியது. வெற்றி மகத்தான வெற்றி அப்துல் கலாமும் அவரது குழுவினரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அப்துல் கலாமை தோளில் தூக்கி ஊர்வலமாக நண்பர்கள் வந்தனர். இன்னல்களையும் இன்பமாக ஏற்றுக் கொண்டார் அப்துல் கலாம். லட்சியத்தில் தளராத உறுதி கொண்டார். தோல்விகள் கண்டு துவளவில்லை முன்வைத்த காலை பின் வைக்கவும் இல்லை அதில் வெற்றியும் நிலை நாட்டினார். அப்துல் கலாமிற்கு கிடைத்த வெற்றி இந்திய நாட்டிற்கே கிடைத்த வெற்றியாக கருதப்பட்டது. முன்பு கேலி செய்த ஏடுகள் எல்லாம் பாராட்டு கட்டுரைகள் எழுதின. பிரதமர் இந்திரா காந்தி வாழ்த்து செய்தி அனுப்பினார். இஸ்ரோவின் தலைவர் தவான் பெருமிதம் அடைந்தார். முழுக்க முழுக்க இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களால் உருவான முயற்சி என்று விஞ்ஞானிகள் பெருமைப்பட்டனர். 20 ஆண்டுகள் ஆராய்ந்து விடாமுயற்சியுடன் போராடி பெற்ற வெற்றி. மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் எஸ்எல்வியின் வெற்றி குறித்து நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்கலாம், "வெற்றி வேண்டுமானால் எதிர்நீச்சல் போட வேண்டும். தோல்வியை கண்டு ஒருபோதும் துவண்டு விடக்கூடாது விடா முயற்சியே ஒருவருக்கு வெற்றிக்கனி கிடைக்க வழி வகுக்கும் என்று உரையாற்றினார்"

பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பு;

அந்த சமயத்தில்தான் டில்லி வருமாறு தவான் இடமிருந்து அப்துல் கலாமிற்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்ற அப்துல் கலாம் டெல்லி சென்றார் அங்கு தவானை சந்தித்தபோது அப்துல் கலாம் பாரத பிரதமர் இந்திரா காந்தி உங்களை சந்திக்க விரும்புகிறார்! செல்லலாமா? என்று கேட்டார். அப்துல் கலாம் சிறிது தயங்கினார் தயக்கத்திற்கான காரணம் என்னவென்று தவான் கேட்டார் நான் எப்போதும் போல் சாதாரணமாக நீலவண்ண சட்டையை அணிந்திருக்கிறேன். கால்களுக்கு பூட்ஸ்களும் இல்லை. சாதாரண செருப்புகளை அணிந்துள்ளேன். இந்த கோலத்தில் பிரதமரை சந்திக்க தயக்கமாக உள்ளது என்றார் அப்துல் கலாம். மிஸ்டர் கலாம் உடைகளைப் பற்றியோ அணியும் காலணிகளை பற்றியோ கவலைப்பட வேண்டாம் வெற்றி என்னும் பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள் தயங்காமல் வாருங்கள் என்று தான் கூறினார்.

அரை மனதுடன் தவானுடன் இணைந்து கலாம் புறப்பட்டார். அன்று பிரதமர் தலைமையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதற்கான நாடாளுமன்ற குழுவினர் கூட்டம் நடைபெற இருந்தது.

மக்களவை மாநிலங்களவை சேர்ந்து 30 உறுப்பினர்கள் கூடியிருந்தனர் அப்போது பிரதமர் எஸ்.எல்.வியின் வெற்றியை பற்றி பாராட்டி பேசினார்.திடீரென்று மிஸ்டர் கலாம் நீங்கள் பேசுவதை நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்று கேட்டுக் கொண்டார். அப்துல் கலாம் எழுந்து நின்று பேச தொடங்கினார், இந்திய நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களின் இந்த மகத்தான கூட்டத்தில் நானும் கலந்து கொண்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். முற்றிலும் நமது தாய் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு மணிக்கு 25 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்ட ஒரு ராக்கெட்டை நமது நாட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை மட்டுமே அறிந்தவன் நான். என்று பேச தொடங்கியதும் அரங்கமே மகிழ்ச்சியில் கைத்தட்டி ஆரவாரம் செய்தது. அடுத்து தனக்கு இந்த வாய்ப்பினை வழங்கி நமது நாட்டின் அறிவியல் வலிமையை நிரூபிக்க வைத்தமைக்காக நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறி முடித்தார். பிரதமர் கொடுத்த ஆக்கமும் ஊக்கமும் எஸ்எல்வியில் அடுத்த கட்ட ஆய்வினை தொடங்கினார். அப்பணியில் வழக்கம் போல் ஆர்வத்துடன் செயல்பட்டார் அப்துல் கலாம். அப்போது வளிமண்டல இயக்கவியல் மற்றும் வடிவமைப்பு குழுவின் இயக்குனர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. இயக்குனர் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அப்துல் கலாம் எதிர்கால ஏவுகலன்களை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது போன்ற பணிகளில் மூழ்கினார். இதற்கிடையே அறிவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமையில் டேராடூனில் எஸ் எல் வி பற்றிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற அப்துல் கலாம் சென்றார்.

விழாமுடிவில் ராஜா ராமன் டேராடூனில் கலாமை பணியாற்றுமாறு தவான் அனுமதியுடன் கேட்டார். கலாம் அதற்கு ஒப்புதல் அளித்தார். 18 ஆண்டுகள் பணியாற்றி இஸ்ரோவில் இருந்து மாறிய ராஜா ராமண்ணா குறிப்பிட்ட ஆய்வு கூட்டத்தில் திட்ட இயக்குனராக 1982 ஆம் ஆண்டு ஜூன் முதல் பதவியேற்றார்.

அண்டை நாட்டை அலறச்செய்த அக்னி ஏவுகணை உருவான  கதை

15989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் நாளில் அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்த திட்டமிட்டனர். அதற்காக பொக்ரான் பகுதியில் இருந்த கிராம மக்களை எல்லாம் வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஏவுகணை சோதனையை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் திட்டத்தை முறியடிக்க திட்டமிட்டனர். அதற்கு தகுந்தார் போல் சில இயந்திரக் கோளாறுகளினால் அன்றைய தினம் ஏவுகணை விண்ணில் செலுத்துவது தள்ளி வைக்கப்பட்டது. சில நாட்களில் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 1989 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் நாளில் விண்ணில் செலுத்த முடிவு செய்த போது இயந்திரத்தில் கோளாறு மீண்டும் தடங்கள் ஏற்பட்டது. இதனை அறிந்து பத்திரிகைக்காரர்கள் எல்லாம் முன்பொறு முறை கேலியும் கிண்டலும் செய்தது போலவே இம்முறையும் கேளியும் கிண்டலும் செய்தனர். போற்றுவோர் போற்றட்டும் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பாணியில் இயந்திரக் கோளாறினை சரி செய்து 1989 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் நாளில் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இம்முறை வெற்றிகரமாக ஏவுகணையை விண்ணில் செலுத்தி விடலாம் என்ற உறுதியுடன் முழு நம்பிக்கை கொண்டனர். விஞ்ஞானிகள் குறிப்பிட்ட நாளில் சரியாக காலை ஏழு, பத்து மணிக்கு ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. எவ்வித சிக்கலும் இன்றி கன கச்சிதமாக அக்னி ஏவுகணை விண்ணில் பறக்க தொடங்கியது. பத்து நிமிடங்களில் வரலாற்று சிறப்புமிக்க விண் பயணத்தை நிகழ்த்தியது. அதன் மூலம் மாபெரும் வெற்றி கிட்டியது. உங்களுடைய முயற்சி வெற்றியினால் நாடு பெருமிதமடைகிறது என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி பாராட்டினார். தொடர்ந்து அன்றைய குடியரசு தலைவர் ஆர் வெங்கட்ராமன் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அக்னியின் வெற்றி அமெரிக்காவை அலறச் செய்தது. நம் நாட்டை மிரட்டி பார்த்தது. அந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் நம் நாடு சிறிதும் அஞ்சவில்லை. விண்வெளிச் சோதனையில் கலாம் குழுவினரின் மூலம் இந்தியா விஸ்வரூபம் எடுத்தது. இதன் மூலம் இந்திய மக்களுக்கு பெரும் பலத்தினை தேடி தந்தார் அப்துல் கலாம்.

புகழுக்கு அடிமை இல்லை 
அப்துல் கலாம்

அக்னி ஏவுகணையின் வெற்றி, கலாமை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது எனலாம். ஆனால் அதற்கு சிறிதும் அப்துல் கலாம் மயங்கி விடவில்லை. விஞ்ஞானிகள் பொறியாளர்கள் அடங்கிய குழுவின் கூட்டு முயற்சியின் வெற்றியை இந்த வெற்றி என்று கூறினார். மேலும் இளைய தலைமுறையினருக்கு நான் ஒரு இலட்சிய பாதையை உருவாக்கி தந்துள்ளேன் என்று அடக்கத்துடன் கூறினார். அப்துல் கலாம் இப்போது சிலர் ஏவுகணை கண்டுபிடிப்பு அழிவிற்கான வழி என்று தத்துவம் பேசினார்கள். நாடு அமைதியாக இருக்க வேண்டுமானால் இந்த ஏவுகணைகள் மிகவும் அவசியம் என்றார். இல்லையென்றால் அந்நிய நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து தான் வாழ வேண்டி இருக்கும் என்று விளக்கம் அளித்தார் அப்துல் கலாம்.

இந்தியாவின் ஏவுகணை மனிதர் அப்துல் கலாம்:

அக்னி 1 ஏவுகணை பிரித்து ஏவுகணை ஆகியவை தயாரிக்கப்பட்டன. இரண்டுமே அணுகுண்டுகளை சுமந்து செல்ல கூடியவை. அக்னி வரிசையில் பின்னர் தயாரிக்கப்பட்ட அக்னி ஃபைவ் ஏவுகணை 5 ஆயிரம் முதல் 8000 கிலோமீட்டர் தொலைவிற்கு பறந்து சென்று தாக்க வல்லது ப்ரீத்தி வரிசையிலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டனர். இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரம் இட்டவர் அப்துல் கலாம் எனவே அவரை ஏவுகணை மனிதர் என்று வர்ணிப்பதுண்டு. செயற்கைக்கோள்களை செலுத்த அப்துல் கலாம் உருவாக்கிய எஸ்எல்வி ராக்கெட்டின் திறன் பின்னர் மேலும் அதிகரிக்கப்பட்டது. அப்துல் கலாம் ஏவுகணை பக்கம் திரும்பியதற்கும் முன்னர் பிஎஸ்எல்வி ராக்கெட்டை மேலும் அதிக திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களை கண்டறிதல் போன்ற பணிகளுக்காக செயற்கை கோள்களை செலுத்தி வருகின்றது.

ஏவுகணைகளை உருவாக்க முக்கிய பங்களித்ததன் மூலம் இந்தியாவை இனி எந்த நாடும் மிரட்டத் துணியாது என்ற நிலையை அப்துல் கலாம் உண்டாக்கியுள்ளதாக கூறலாம். ஆனாலும் நமது நாட்டின் எதிரி வறுமையே என்று கருதினார். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம் என்று கூறியவர் அப்துல் கலாம். ஆயுதங்களை உருவாக்கியவர் அமைதியை தான் நேசித்தார். குடியரசு தலைவர் என்று உயர்ந்த பதவியை வகித்த போதும் தமது எளிமை மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த மாமனிதராக திகழ்ந்தார்.

கலாமின் இதர கண்டுபிடிப்புகள்;

அக்னி ஏவுகணையில் இலகு கனமான கார்பன் உலோகத்தை  பயன்படுத்தினார். இதன் எடை நான்கு கிலோவிலிருந்து 400 கிராம் ஆக குறைக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் தூக்கி நடக்கக்கூடிய அதிக கனம் இல்லாத உதவி கருவிகளை கண்டுபிடித்தார். இதுவே அப்துல் கலாம் தான் கண்டுபிடித்தவைகளில் எல்லாம் அவருக்கு மிகவும் பிடித்த கண்டுபிடிப்பு என கூறியுள்ளார். இந்திய நாட்டின் பெருமையை உலக நாடுகளில் உயர்த்தினார் அப்துல் கலாம் விலை உயர்ந்த கார் என எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை. தமது உழைப்பு முழுவதையும் தாய் நாட்டிற்கே அர்ப்பணிப்பு செய்த தன்னலமற்ற தியாகியாக சிறந்து விளங்கினார். தமது எழுபதாவது வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். ஆனால் பிரதமர் அவரை பணியிலிருந்து விடுவிக்க விரும்பவில்லை. தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

இயற்கையை நேசிப்பவர் 
அப்துல் கலாம்:

இயற்கையை பெரிதும் நேசிப்பவர் அப்துல் கலாம். அதற்கான காரணம் தன் மீது கற்களை வீசினாலும் கிளைகளை வெட்டினாலும் அது பற்றி கவலைப்படாமல் தீமை செய்வதற்கும் நன்மையே செய்வது போன்று தம்மை நோக்கி வரும் அனைவருக்கும் நிழல் கொடுத்து பசிப்போர்க்கு பூசிக்க பழங்களையும் தரும் மாமரம் போல் எனக்கு துணை நிற்கும் நண்பன் இயற்கை தான், எங்கும் இறைவன் இருக்கிறார் என்பதை இயற்கை எனக்கு நினைவுபடுத்தி வருகிறது. என்று இயற்கையை போற்றுகிறார் அப்துல் கலாம்.
Abdulkalam history in Tamil

அப்துல் கலாம் பரிசாக கேட்டது:

அக்னி ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட போது மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே சி பந்த் கலாம் அவர்களே இந்த வெற்றியை நாம் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் அதற்காக உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் கேளுங்கள் தருகிறோம் என்று கேட்டார். எங்கள் அறிவியல் ஆராய்ச்சி வளாகத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் கொடுங்கள் என்று கேட்டார் அப்துல் கலாம்.

மக்கள் ஜனாதிபதியானார் அப்துல் கலாம்;

2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாளில் 12வது குடியரசு தலைவராக டாக்டர் அப்துல் கலாம் பதவி ஏற்றார். குடியரசு தலைவர் தான் இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசின் உயர்ந்த தத்துவம் இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பது அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தான் அப்துல் கலாம். குடியரசு தலைவர் ஆனதும் அவரது உடையையும் தலைமுடியையும் மாற்ற சிலர் வேண்டுகோள் விடுத்தனர். புன்னகையுடன் அதனை மறுத்துவிட்டார் அப்துல் கலாம். குடியரசுத் தலைவர் மாளிகை எப்பொழுதும் உற்றார் உறவினர் நண்பர்கள் என திருவிழா கூட்டமாக நிறைந்து காணப்படும். ஆனால் கலாம் அந்த நிலையை மாற்றிவிட்டார் ஏனெனில் அப்துல் கலாம் திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி அதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து உற்றார் உறவினர் யாரையும் உதவிக்காக அழைத்து தன்னுடன் வைத்துக் கொள்ளாதவர் அது மட்டும் இன்றி அப்துல் கலாமின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது அண்ணன் முத்துமிறான் மற்றும் உறவினர்கள் யாரையுமே குடியரசு தலைவர் மாளிகையில் தங்க வைக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய இந்திய அறிவியல் துறைகளில் தனிப்பெரும் முத்திரையை பதித்த அப்துல் கலாம் இந்தியாவின் பன்னிரண்டாவது குடியரசு தலைவராக பதவி ஏற்க புதுடில்லி செல்வதற்கு முன் ராமேஸ்வரம் சென்று அவரது அண்ணன் முத்துமிரானின் ஆசியைப் பெற்றார். அதன் பின் ராமநாதபுரத்தில் தான் படித்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரையும் மற்ற ஆசிரியர்களையும் சந்தித்தார். பின்பு வகுப்பில் இருந்த ஒரு மாணவனிடம் வருங்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டார்? நான் படித்து தங்களைப் போல ஒரு விஞ்ஞானி ஆக விரும்புகிறேன் என்று பதில் கூறினான் மாணவன்.

பாதுகாப்பை மறுத்தவர் 
அப்துல் கலாம்;

அதிகாலையில் எப்பொழுதும் எழுந்து வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். குடியரசு தலைவர் மாளிகையில் அதிகாரிகள் பாதுகாப்பின்றி அவ்வாறு நடக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அப்படி இருந்தும் அவ்வித பாதுகாப்பை நிராகரித்தவர் அப்துல் கலாம்.

ஆடம்பரத்தை விரும்பாதவர்;

கலாம் குடியரசு தலைவராக பதவியேற்ற பின்பு 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாளில் சென்னைக்கு வருகை புரிந்தார். பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள வந்திருந்தார். விமானப்படை விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் அப்துல் கலாம். விழா மேடை வரை பாதையில் சிவப்புக் கம்பளம் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் நடந்து செல்ல பிடிக்காத கலாம் சுரங்கப் பாதை வழியே வரவேற்பு மேடைக்கு சென்றார். ஆடம்பரங்களை விரும்பாதவர் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

கனவு காணுங்கள்:

கனவு காண வேண்டும் என்று நீங்கள் எப்போதும் சொல்லி வருகிறீர்கள் ஏன் கனவு காண வேண்டும்? எதற்காக கனவு காண வேண்டும்? என்று ஒரு மாணவி அப்துல் கலாமிடம் கேட்டார்? கனவு காண்போம் கனவு காண்போம் கனவுகள் எண்ணங்களாக மாறும் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும் அதன் மூலம் முன்னேற்றங்கள் அடைய முடியும் என்று பதில் அளித்தார். அடுத்து சுடர்கொடி என்னும் மாணவி மனிதன், விஞ்ஞானி, தமிழன், இந்தியன் இந்த அடிப்படையில் உங்களை நீங்களே வரிசைப்படுத்துங்களேன் என்று கேட்டால் மனிதனுக்குள் மற்ற மூவரும் அடங்கி இருக்கிறார்கள் என்று பதில் அளித்தார் கலாம்.

கவிஞர் அப்துல் கலாம்;

கவிதைகள் எழுதுவதில் அப்துல் கலாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் வல்லமை பெற்றிருந்தார். கவிதை தோன்றும் இடத்திலேயே எழுதி விடுவார் ஒரு சமயம் விமான பயணத்தின் போது விமான டிக்கெட்டில் பின்புறத்தில் கவிதை ஒன்றினை எழுதினார். தான் எழுதிய தமது கவிதைகள் அனைத்தையும் முழு நூலாக தொகுத்துள்ளார். நூல்களைப் படிப்பதில் அணியாத ஆர்வம் கொண்டவர் தமிழ் இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஆன்மீக நூல்கள், அறிவியல் நூல்கள், 4000 திவ்ய பிரபந்தம், திருக்குறள், பாரதியாரின் பாடல்கள் என அனைத்து நூல்களையும் கற்று இருந்தார்.

அப்துல்கலாமின் குணாதிசயங்கள்;

 • பதவிகள் வரும் போகும் மனிதன் மட்டும் மாறாதிருப்பான் என்ற பாணியில் குடியரசு தலைவர் பதவியில் இருந்து கலாம் ஓய்வு பெற்றாலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வந்தார்.
 • தன்னிலை உணர்ந்து எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
 • எம்மதமும் சம்மதம் என்ற நிலையை கடைப்பிடித்தார்.
 • உழைப்பு ஒன்றே உயர்த்தும் என்று கடினமாக உழைத்தார்.
 • குறிக்கோள் சார்ந்த நேர்மையான உழைப்பு
 • ஆசிரியர்களை இறைவனுக்கு நிகராக மதிக்கும் பண்பு
 • அன்பை மனிதர்களிடம் மட்டுமல்லாமல் மற்ற உயிர்களிடத்திலும் காட்ட வேண்டும் என்ற எண்ணம்
 • மதச்சார்பின்மை இன்றி வாழ்ந்த உத்தமர்.
 • பெற்றோரையும் உறவினரையும் மதிக்கவும் அவர்கள் கூற்றின்படி நடக்கவும் இருந்தவர்.
 • எளிமையானவர் கடைசிவரை தான் தாங்கி அறையில் தன்னுடைய பொருள்களைத் தவிர வேறு எதையும் வைத்து இருக்காதவர். இறந்த பின்பு அவரது அறையில் இருந்த எடுக்கப்பட்ட பொருட்களுமே மூன்று பெட்டிகளில் அவர் கொண்டு வந்த புத்தகங்கள் மட்டுமே
 • தன்னலமற்றவர் தான் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தன்னை தேடி வரும் உறவினர்களை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்காமல் தனது அறையிலேயே அமர வைத்து பேசி அனுப்பினார்.
 • தளராத மனம் படைத்தவர்
 • சுத்தம் சுகம் தரும் என்ற கோட்பாட்டின்படி தன்னையும் தன்னைச் சுற்றி இருந்த பகுதிகளையும் எப்போதும் சுத்தமாக வைத்திருப்பார். தற்போதைய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த சுத்தமாக்குவோம் நம் பாரதத்தை என்ற திட்டத்தை மனதார பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தார்.
 • கடின உழைப்புக்கு சொந்தக்காரர் இயற்கையை நேசிப்பவர்.

அப்துல் கலாமின் உயர்ந்த கருத்துக்கள் 

 1. வெற்றி என்பது தோல்விகளுக்கிடையே தான் உள்ளது.
 2. எதைச் செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு  ஆர்வத்தையும் சக்தியையும் வெளி படுத்த வேண்டும்
 3. சர்வ சக்தி கொண்ட எல்லைகளா தான் அவரவரின் வாழ்க்கைகளை தீர்மானிக்கின்றன.
 4. மதம் என்பது உயர்ந்தவர்களுக்கு நட்பினையும் சிறு புத்தி கொண்டவர்களுக்கு பகையினையும் உண்டாக்கும் கருவியாகும்.
 5. புதுமைகளை உண்டாக்கும் எண்ணங்களுக்கு ஒரு தூண்டு சக்தியாக இருப்பது பிரார்த்தனையே.
 6. மனம் ஒருமித்து வேலை செய்யாத ஒருவரால் முழு வெற்றி அடைய முடியாது
 7. நேர்மை துணிவு‌ இவைகளை கடைபிடிக்கும் கரங்களே அழகிய கரங்களாகும்
 8. கல்வி திறமை இவைகளை வலுப்படுத்திக் கொண்டால் அறிவாற்றல் நிலையான சொத்தாகும்.
 9. குறிக்கோளில் வெற்றி பெற வேண்டுமானால் லட்சியத்தில் இம்மியும் பிசகாமல் செயல்பட வேண்டும்
 10. ஈடுபாடு பங்கேற்பு, பொறுப்புணர்வு இம்மூன்று அம்சங்கள் தான் செயல் திட்டத்தின் தாரக மந்திரங்கள்
 11. வாழ்க்கையில் மகிழ்வு நிறைவு பெற்று எல்லாமே தேர்ந்தெடுப்பதின் முடிவுகளைப் பொறுத்தே அமைகிறது.
 12. விற்பனை செய்ய முடியாத, பயன்படாத எதையும் தயாரிக்க கூடாது.
 13. பள்ளிக்கூட வாழ்க்கை வாசிக்கவும் படிக்கவும் கற்றுத் தருவதோடு கவனிக்கவும் கற்றுத் தர வேண்டும்.
 14. மகத்தானவர் காணும் மகத்தான கனவுகள் எப்போதுமே நினைவாகிறது.
 15. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்க வேண்டும்.

மாணவர்களை வெற்றி பெற அப்துல் கலாம் கூறிய எட்டு உறுதிமொழிகள்;

 1. உனக்குள் ஓர் அரும்பெரும் சக்தி உள்ளது அதில் வெற்றி எண்ணத்தை வளர்த்து உன் சக்தியால் வெற்றி அடைந்தே தீர வேண்டும்
 2. ஒவ்வொரு நாளும் ஆசிரியர் சொல்லும் பாடங்களை அன்றைய இரவே படிக்க வேண்டும்
 3. அறிவுப் பெட்டகமாக திகழும் உன் ஆசிரியர்களின் வாழ்வு முறையை தெரிந்து அவர்களை மதித்து நடக்க வேண்டும்.
 4. பெற்றோர்களிடமிருந்து நல்லொழுக்கத்தை கற்க வேண்டும்
 5. நீ பெற்ற அறிவை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்
 6. நீ வெற்றி பெற்று மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடி மகிழ வேண்டும்
 7. உன் வீட்டில் சிறு நூலகம் அமைத்து தினம் 30 நிமிடம் ஆவது புத்தகங்களை படிக்க வேண்டும்
 8. பிரச்சனைகள் கண்டு பயப்படக்கூடாது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, விடாமுயற் சியுடன் உன்னத லட்சியத்தை அடைய வேண்டும் வெற்றிக்கு மூலமாக அறிவு உழைப்பு தைரியம் விடாமுயற்சியை பின்பற்ற வேண்டும்.

அப்துல் கலாம் மாணவர்களுக்கு கூறிய கவிதை;

நான் பறந்து கொண்டே இருப்பேன்.
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்.
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுகளுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்று மன உறுதியுடன்
நான் பிறந்தேன்  ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன்
ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன் பறப்பேன் வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

விழிமா வலைத்தளம் வழங்கிய இந்த அப்துல் கலாம் பற்றிய சிறிய கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் நிச்சயம் மனதின் ஏதோ ஒரு மூலையில் அவரின் சொற்களோ பொன்மொழிகளோ உயர்ந்த கருத்துகளோ அவரின் குணாதிசயங்களோ மனதில் பதிந்து இருக்கும் என்று நம்புகிறோம். அவரின் வழியை பின்பற்றி நாமும் நமக்காகவும் நம் நாட்டிற்காகவும் உழைக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top